கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பாண்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் பாண்டு குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை மூத்த பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன்  பகிர்ந்துள்ளார்.


அதில் "நடிகர் பாண்டு காலமானார்.. சாதாரண ஆளில்லை..
கொரோனா தொற்று  அவரை 74 வயதில் கொண்டு போய்உள்ளது..
பாண்டு என்கிற பிம்பம் மிகவும் அலாதியானது. நடிப்பை தாண்டி அற்புதமான ஓவியர்.. வெற்றிகரமான விளம்பர கம்பெனியின் தலைசிறந்த நிர்வாகி.
சிறுவனாக இருந்தபோது நடித்த கமல் அதன் பிறகு காணாமல் போய் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த  (1970) மாணவன் என்ற படத்தில் இளைஞனாக மீள் அறிமுகமானார்.
நடிகர் பாண்டுவும் இதே படத்தில் தான் கல்லூரி மாணவராக அறிமுகமானார்..
நடிகர் பாண்டுவின் அண்ணன் பி.எல். செல்வராஜ். இடிச்சபுளி செல்வராஜ் என்று திரையுலகில் பிரபலமாய் பேசப்பட்டவர்.


 




இன்றைய தலைமுறைக்குச் சொன்னால், ஒரு படத்தில் கவுண்டமணி செந்திலிடம் கோவை சரளாவின் காது குறைபாடு தந்தையாக வந்து காமெடி செய்வார் அவர் தான் இடிச்சபுளி செல்வராஜ்.
எம்ஜிஆர்,யாருக்கு எவ்வளவு எந்த நேரத்தில் உதவி செய்வார் என்பதெல்லாம் செல்வராஜுக்கு அத்துபடி.. அந்த அளவுக்கு எம்ஜிஆரின் வலதுகரமாக நம்பிக்கைக்குரிய உதவியாளராக திகழ்ந்தவர் இடிச்சபுளி செல்வராஜ்..
எம்ஜிஆர் நடித்த பல படங்களுக்கு உதவி இயக்குனராகவும் பணி புரிந்தவர். எம்ஜிஆரின் பிரம்மாண்டமான படைப்பான உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கும் உதவி இயக்குனர் இடிச்சபுளி செல்வராஜ்..
இந்த வகையில்தான் செல்வராஜின் தம்பியான நடிகர் பாண்டுவுக்கு எம்ஜிஆருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது..
1973ல் உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியான போது அதற்கு போஸ்டர்கள் எங்குமே ஒட்ட முடியாத ஒரு துர்பாக்கிய சூழல் ஏற்பட்டது. போஸ்டர்கள் ஒட்டப் பட்டாலும் உடனே கிழித்து எறிந்து விடுவார்கள் என்ற நிலைமை.
அப்போது தான் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஒரு வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தலாம் என்று நடிகர் பாண்டு எம்ஜிஆருக்கு ஒரு யோசனை தெரிவித்தார்..
அதன்படி வட்ட வடிவில் ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்பட்டு முதன்முறையாக சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீசான திரையரங்குகளில் எல்லாம் ஒட்டப்பட்ட அந்த ஸ்டிக்கர்கள் பல ஆண்டுகளுக்கு கிழியாமல் நினைவுச்சின்னமாக இருந்தன.
எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று அதிமுகவின் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தையும் வடிவமைத்தவர் நடிகர் பாண்டுதான்..





500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பாண்டு அற்புதமான நகைச்சுவை நடிகர்.
வாயையும் முகத்தையும் அஷ்ட கோணலாக்கி எல்லா காட்சிகளிலும் அவர் செய்யும் ஒரு அலம்பல் வித்தியாசமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை..
ஏதோ ஒரு ராமராஜன் படத்தில் கவுண்டமணியின் மகனாக (ஒரு தலை ராகம் கதாநாயகி) ரூபாவின் கணவனாக அல்லல்படும் அந்த பாத்திரம், சிதம்பரம் சீர்காழி மாயவரம் கும்பகோணம் என்று கூவும் பிரபுதேவா படத்தில் பஸ் ஸ்டாண்ட் கழிவறை காண்ட்ராக்டர்.. இப்படிப் பாண்டுவின் நகைச்சுவை பாய்ச்சலை அடுக்கி கொண்டே போகலாம்.." 
இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.