உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக நேற்று நடைபெற வேண்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. மாடுபிடி வீரர்களும், போட்டியில் பங்கேற்ற காளைகளும் முறையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு களத்தில் இறங்கினர்.


முதல்காளையாக கோவில் காளை களமிறக்கப்பட்ட பிறகு போட்டிக்காளைகள் களமிறங்கியது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் வெற்றிகரமாக 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.




அவருக்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் காரை பரிசாக வழங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் கார்த்திக்கிற்கு கடுமையான போட்டியாளராக விளங்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த ராம்குமார் 19 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் 13 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவரும் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டுது.


அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது போல, யாரிடம் அடங்காமல் காளையை பிடிக்கும் காளையர்களை அலறவிட்ட காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில், சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் என்பவரது காளை தேர்வானது. அவரது காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.




திருமங்கலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கத்தின் காளை இரண்டாவது பரிசை வென்றது. அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை குலமங்கலம் வழக்கறிஞர் திருப்பதியின் காளை வென்றது. அவருக்கு பசு கன்று பரிசாக வழங்கப்பட்டது.


இந்த காளைகள் மட்டுமின்றி போட்டியில் வெற்றி பெற்ற பிற காளைகளுக்கு தங்கநாணயம், கட்டில், பீரோ பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், இருசக்கர வாகனம், கட்டில், பீரோ, சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்ட பல பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டது.


இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதன்முறையாக 1020 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த காளைகளை அடக்க மொத்தம் 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அமைச்சரின் காளை உள்பட பல முக்கிய பிரமுகர்களின் காளைகள் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண