தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.கே.எஸ். விஜயன் ஓராண்டுக்கு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக செயல்படுவார் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கும்போது சிறப்பு பிரதிநிதி அந்த சந்திப்பின்போது உடன் இருப்பார்.
முன்னாள் எம்பியான ஏகேஎஸ் விஜயன் திமுகவின் விவசாய அணிச்செயலாளராகவும் இருக்கிறார். தற்போது இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவி மாநில அமைச்சருக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் இவருக்கும் ஒரு அறை ஒதுக்கப்படும். முக்கியமான விவாதங்களில் ஏகேஎஸ் விஜயனும் கலந்துகொள்வார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வரும் 17ஆம் தேதி சந்திக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியில் தளவாய் சுந்தரம் டெல்லி பிரதிநிதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் டெல்லி செல்லும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழ்நாட்டில் தற்போதுள்ள கொரோனா நிலவரம், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தேவைப்படும் தடுப்பூசிகளின் தேவைகள், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைப்பது, கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் மருந்தை தமிழ்நாட்டிற்கு அதிகளவில் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்.
இது மட்டுமின்றி, தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடப்பாண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மருத்துவ படிப்பு உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்க உள்ளார். மேலும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை மு.க.ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7ஆம் தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்டது முதல் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. தளர்வுகள் அற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன் பலனாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.