ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜி கோரிய முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யபடலாம் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரை பிடிக்க காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டி.எஸ்.பி, 2 காவல் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதியில் சில மீனவ நண்பர்களின் உதவியோடு இருக்கலாம் என காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவர் கடலுக்கு சென்ற படகுகள் எத்தனை, திரும்பியவை போன்றவை தகவலும் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவரும் அவரது நண்பர்களும் பாலவளத்துறை மற்றும் மற்ற அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 3 கோடிக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரைத்தொடர்ந்து 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் மீது விருதுநகர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்மீதான விசாரணையின்போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டு வழக்கு எனவும் முன் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ஆன்லைன் தேர்வு நடத்த கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது தமிழக அரசு..