சீனாவின் இலங்கைக்கான துாதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான துாதரக அதிகாரிகள் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக  யாழ் மாவட்டத்திற்குள்   விஜயம் ஒன்றை மேற்கொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. முன்னதாக, வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில்   புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்கள் தங்கியிருப்பார் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியிருந்தது. மேலும், அவரின் வருகைக்கான காரணமாக,அங்கு  கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்க உள்ளதாகவும் சீன தூதரகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 




ஆனால், இதற்கு வேறு காரணங்கள் இலங்கை அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்படுகிறது. அதாவது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் இருக்கும், யாழ்ப்பாணத்துக்கு உட்பட்ட மூன்று முக்கியத் தீவுகள் நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு. ஆகிய தீவுகளில் டீசல் மூலம் மட்டுமே மின்சாரம் கிடைத்து கொண்டிக்கிறது. இங்கு  காற்றாலை மற்றும் சோலார் மூலமாக மின்சாரம் தயாரிப்பதற்கான சர்வதேச  ஏலத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இந்திய நிறுவனங்கள் உட்பட, பல நாடுகளின் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைக் கைப்பற்ற போட்டியிட்டபோது, சீனாவைச் சேர்ந்த சினோசர் - இடெக்வின் நிறுவனம், சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் திட்டத்தின் ஏலத்தை எடுத்தது. இதற்கான ஒப்பந்தமானது கடந்த ஜனவரி மாதம், அதிகாரபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் சீனா  போட்டுக்கொண்டது.




ஆனால், இந்தியா அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. காரணம், அந்தத் தீவுகளிலிருந்து இந்தியாவுக்கான தூரம் வெறும் 49 கி.மீட்டர் தொலைவிலும், கச்சத்தீவிலிருந்து வெறும் 29 கி.மீட்டர் தொலைவிலும் இருந்தது. எனவே, இந்திய எல்லைக்கு மிக அருகில், சீன நிறுவனம் ஒரு பெரிய மின்சாரத் திட்டத்தை செயல்படுத்தவிருப்பது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களும் பகிரங்கமாக எச்சரிக்கை செய்தனர். அதேபோல, இலங்கையின் வடக்கு மாகாண தமிழ்த் தலைவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், சீன நிறுவனம் நெடுந்தீவில் மின்திட்டங்களை செயல்படுத்தும் போர்வையில், இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். ஆயுதங்களையும், ராணுவத் தளவாடங்களையும் கொண்டுவந்து சேமித்து வைத்துக்கொண்டால், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் உடனடியாக இந்தியாவைத் தாக்கி நிலைகுலைய வைக்க முடியும். இது சாதாரணமான ஆபத்து அல்ல. இந்த ஆபத்தின் தீவிரத்தை இந்தியா உடனடியாக உணர்ந்து, அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு எந்த நேரமும் ஆபத்தின் விளிம்பில்தான் இருக்க வேண்டும் என மத்திய உளவுத்துறை எச்சரித்தது.


இந்தச் நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே, கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை மின்சக்தித்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவைச் சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை முடிவில், இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் முழுத் தொகையான 12 மில்லியன் அமெரிக்க டாலரையும், இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்.இந்தியாவின் ஆலோசனையை  ஏற்றுக்கொண்ட இலங்கை  அமைச்சர் டலஸ் அழகப்பெரும, என்னைச் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான முழுமையான நிதித்தொகை 12 மில்லியன் அமெரிக்க டாலரை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார். இந்தப் பிராந்தியம் குறித்து அக்கறை செலுத்துகிற ஒரு மிகப்பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா இலங்கையின் மூத்த அண்ணனைப் போன்றது. எனவே, இந்தியாவின் இந்த யோசனையை, ஆலோசனையை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம்" என அறிவித்தார்.




 


இதனால், சீன நிறுவனத்துக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் அப்போதே விரிசல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.இது இந்தியாவுக்கு கிடைத்த ராஜதந்திரமாகவே பார்க்கப்பட்டது. இதனையடுத்து, சீனா தனது கூடாரத்தை மாலத்தீவில் விரித்துள்ளது.அதாவது அந்த  சீன நிறுவனம், சூரியஒளி மின்சாரத் திட்டத்தை இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மாலத்தீவுக்கு மாற்றியிருக்கிறது. அந்த நாட்டிலிருக்கும், சுமார் 12 தீவுகளில் சூரியஒளி மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை மாலத்தீவிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் தலையீட்டால், இலங்கையில் சீன நிறுவனம் பின்வாங்கியிருப்பது, சீனாவின் முதற்கட்ட பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.




இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இலங்கை வடக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் சீன தூதர் கடலோரப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு படம்பிடித்துள்ளார். இது இலங்கை மற்றும் இந்திய அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி, அவற்றை மெல்லத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில், இந்திய அரசாங்கம் மிகத்தீவிரமாகச் செயல்பட்டுவரும் வேளையில், சீன விவகாரத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே இலங்கை-இந்திய நட்பை விரும்பும் இலங்கை தமிழர்கள் கூட்டமைப்பின் எண்ணமாக இருக்கிறது