அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க நாங்கள் விரும்புகிறோம் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 


அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஈபிஎஸ் தரப்பினர், ஆம். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி ஒருமித்து தேர்தெடுக்கப்பட்டவர் என தெரிவித்தனர். 


அடிப்படை உறுப்பினர்கள் ஒன்று கூடிதான் அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். 


அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை: 


அதிமுக பொதுக்குழி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியத்தை அறிய விரும்புகிறோம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் முன்வைத்த கேள்விகளும், பதில்களும்... 


ஓபிஎஸ், ஈபிஎஸ் என்றால் என்ன அர்த்தம்..? 


ஓபிஎஸ், ஈபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என இருதரப்பு வழக்கறிஞர்களிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணையின்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் என குறிப்பிட்டு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தபோது நீதிபதிகள் இந்த கேள்வியை முன்வைத்தனர். 


அப்போது, இருவரும் சொந்த ஊர்களின் பெயர்களை தங்கள் பெயருடன் இணைத்துள்ளார்கள் என வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர். 


பொதுக்குழு தீர்மானங்களும் வழக்கில்தான் வரும்:


கடந்த ஜீலையில் நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இதுவரை மனுதாக்கல் செய்யப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பொதுக்குழுவுக்கு எதிராக மனு தாக்கல் எனில், அதன் தீர்மானங்களும் வழக்கின்கீழ் வரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 


என் அனுமதியின்றி பொதுக்குழுவை கூட்டினார்கள் - ஓபிஎஸ்


எனது அனுமதியின்றி கடைசியாக பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டினார்கள். உண்மையில் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் தொடர்பான ஆவணங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில்தான் ஆவணம் சமர்ப்பித்தோம் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.