மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்தநாள் விழா நேற்று தமிழக முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரபாண்டியர் கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியின் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு காவல்துறை சார்பாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க.,வின் எடப்பாடி அணி சார்பாக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் ராஜூ,ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் தன்னுடைய ஆதரவாளருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 





 

அதேபோல் ஓ.பி.எஸ்., அணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து மதிமுக சார்பாக துரை வைகோ அவர்கள் மற்றும் தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டபொம்மன் சிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



 


இந்நிலையில் விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட வாகனத்தில் கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் காரின் மேற்கூரையின் மீது அமர்ந்து கொடிகளை அசைத்தபடியும் கதவின் ஓரத்தில் 10பேர் தொங்கிய படியும் சாகசப் பயணம் மேற்கொண்டனர். சிலை அருகே பாதுகாப்பு  பணியிலிருந்த காவல்துறையின் அறிவுறுத்தலையும் மீறி விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை அங்கும் இங்கும் அசைத்தபடி காரை இயக்கி அச்சுறுத்தும் விதமாக மேற்கூரையில் பயணித்தனர்.