மத்திய தொலைத்தொடர்பு நிறுவனம்
சொத்து வரி செலுத்தாத மத்திய அரசின் நிறுவனத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள். காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட காமராஜர் தெரு, வணிகர் வீதி, என இரு பகுதிகளில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, உள்ளிட்டவை எதையும் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம்
இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மேயர், கவுன்சிலர்கள் என உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று உள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதியிணை ஏற்படுத்தும் வகையில் நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூல் செய்யும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
சொத்துவரி பாக்கி
அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பலமுறை நோட்டீஸ் அளித்தும் வரிபாக்கியை செலுத்தாத நிலையில், தற்பொழுது சொத்து வரி பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டி காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சொத்து வரியை செலுத்த வலியுறுத்தி நோட்டீஸ் வழங்க பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்றனர்.
பிஎஸ்என்எல் அலுவலக அதிகாரிகள் நோட்டிசை வாங்க மறுத்ததால், மாநகராட்சி அதிகாரிகள் அலுவலக வாசலில் ஜப்தி நோட்டீசை ஓட்டிவிட்டு சென்றனர். மத்திய அரசின் அலுவலகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிகாரிகளின் விளக்கம் என்ன ?
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, உள்ளிட்டவை எதையும் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர் . அரசு சார்ந்த நிறுவனம் என்பதால் இதுகுறித்து முறையாக அவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் எவ்வாறு சொத்து வரி பாக்கி உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறதோ, அதேபோன்றுதான் இந்த நிறுவனத்திடமும் வசூலிக்க கால அவகாசம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கிய செலுத்தாத காரணத்தினாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்