’அணிகள் இணைந்தாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை’ என்று அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் எப்போதோ போட்ட பதிவு, இப்போதும் வானலியில் கொதிக்கும் எண்ணெய் மாதிரி அதிமுகவில் தகித்துக்கொண்டிருக்கிறது.


ஒருபக்கம் இரட்டை தலைமையில் அதிருப்தி அடைந்துள்ள நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிமுகவில் மீண்டும் ‘ஒற்றைத் தலைமை’ ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் கவுண்டர் Vs முக்குலத்தோர் என்ற உட்கட்சி சாதிய மோதல் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது.



வேலுமணி, தங்கமணி


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஒபிஎஸ் இருந்தாலும் அவருக்கான முக்கியத்துவத்தையும், முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் வழங்காமல், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி சர்வ வல்லமை படைத்த தலைவராக அதிமுகவில் ஆக நினைப்பது, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகளையும் முன்னாள் அமைச்சர்களையும் புறக்கணிப்பது போன்ற காரணங்களால், இணைந்த அணிகளிலேயே மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.



எடப்பாடி பழனிசாமி


தன்னை இன்னும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவே பிரகடனப்படுத்திக்கொள்ளும் சசிகலாவுக்கு ஆதரவாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் மறைமுகமாக இயங்கி வருவதாக, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைத்த தகவலால், அவர்களை ஓரங்கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த கொங்கு மண்டல அணி.



சசிகலா


கொங்கு வேளாள கவுண்டர்கள் மத்தியில் செல்வாக்கான தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துவிட்டதால், சசிகலா மீண்டும் அதிமுகவில் வந்துவிடக்கூடாது என்ற தீர்க்கமான முடிவை கவுண்டர்கள் தரப்பு எடுத்து, அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறது. ஆனால், தங்கள் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்டு, பல ஆதாயங்களை பெற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலாவை மட்டும் ஓரங்கட்டியது மட்டுமல்லாமல், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களையும் புறக்கணிக்கும் செயல்களில் ஈடுபடுவதையும், அதிமுகவில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட கவுண்டர் சமுதாயத்தினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் இன்னொரு பக்கம் அவர்கள் மறைமுகமாக காய்களை நகர்த்தி வருகின்றனர்.



வைத்திலிங்கம், ஒபிஎஸ், செல்லூர் ராஜூ


அணிகள் இணைந்த பிறகு தீவிர சசிகலா எதிர்ப்பு அரசியலை கைவிட்டுவிட்ட ஒபிஎஸ், ஒருவேளை சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டார் எனில், முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகளுடன் சேர்ந்து கவுண்டர்கள் அல்லாத பிற சமூக நிர்வாகிகளும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வரக்கூடும் என கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


ஆனால், ஒபிஎஸ்-சை ஓரங்கட்டிவிட்டு, முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக்கும் முயற்சியும் இன்னொரு பக்கம் நடைபெற்று வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ’ஒபிஎஸ் தன்னை நம்பி வந்தவர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை, தொண்டர்களுக்கும் எதுவும் செய்யவில்லை’ என்று புழுக்கத்தில் இருக்கும் பலர், எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முடிவு எடுக்கப்பட்டால் அதனை ஆதரிக்கவும் தயாராக இருக்கின்றனர்.


தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நிக்கியது செல்லாது என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், அந்த வழக்கின் முடிவு சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தால், ஒபிஎஸ் உள்ளிட்ட பலரும் சசிகலா பக்கம் செல்லத் துணிவர் என்றும், அப்படி அந்த வழக்கின் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக இருந்தால் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் ஒற்றை தலைமையாக்க அதிமுகவினர் சம்மதிப்பார்கள் என்றும் பல ஆண்டுகளாக அதிமுக அரசியலை உற்றுநோக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.


சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது, உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு, யார் எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருவது, யாருக்கு செல்வாக்கு அதிகவும் என்ற அதிகார போட்டி நீடிப்பது, மக்கள் பிரச்னைகளுக்கு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்திற்கே தனித்தனியாக கடிதமும் அறிக்கையும் கொடுப்பது உள்ளிட்டவைகளால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.


அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமையாக ஆகப்போவது சசிகலாவா அல்லது எடப்பாடி கே பழனிசாமியா என்பது இன்னும் சில மாதங்களில் தெரியும்..!