விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாமனார், தங்கை, தம்பி உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.



 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து 2021 மார்ச் 31 வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவி ரம்யா விஜயபாஸ்கர் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் சி.விஜயபாஸ்கர் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.



 

பதவிக்காலத்தில் 66 லட்சத்துக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி. வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது 53 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ. கார் வாங்கி இருக்கிறார்.  40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளும் வாங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் 4 கோடிக்கு விவசாய நிலங்களை வாங்கியுள்ளார். லஞ்ச பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் 15 கோடிக்கு வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். அமைச்சராக இருந்த போது பல நிறுவன பங்குகளை 28 கோடிக்கு வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது தான் மற்றும் மனைவி, 2 மகள்கள் பெயரில் 58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.



 

வருமான வரித்துறை கணக்கின் படி 5 ஆண்டில் சி.விஜயபாஸ்கர் வருமானம் 58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என 34.5 கோடி செலவு செய்துள்ளார். சி.விஜயபாஸ்கரும் ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். வருமானத்தை மீறி ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

காஞ்சிபுரம்

 

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் என்பவர் இல்லத்தில், 6:45 மணியிலிருந்து 8 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஜய்குமார்  தேவேரிம்பக்கம், ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.



 

அஜய் குமார் என்பவருக்கு சொந்தமாக தனியார் பள்ளி ஒன்று உள்ளது இல்லத்தில் சோதனை நடைபெற்ற பிறகு பள்ளியிலும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளன. 

 

செங்கல்பட்டு

 

செங்கல்பட்டு மாவட்டம் புதுபட்டினம் பகுதியில் உள்ள விஜயபாஸ்கர் தங்கை (சித்தப்பா மகள்) தனலட்சுமி (பல் மருத்துவர்) வீட்டில் அதிகாலை முதல் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



 

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுக ஆதரவாளர்கள் அப்பகுதியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு. அதேபோல் மதுராந்தகத்தில் வருமான லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.