விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்கு முன்பாக தொண்டர்கள் குவிந்துள்ளனர். சி.வி.சண்முகம் இன்று காலை கைது  செய்யப்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரின் வீடு முன்பாக அதிமுக தொண்டர்கள் அதிகாலை முதல் குவிய தொடங்கியுள்ளனர். 


முன்னதாக கடந்த 28ஆம் தேதி நள்ளிரவு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்படலாம் என வெளியான உறுதிபடுத்தப்படாத தகவலால் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம், அதிமுக வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 28-02-2022 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தலைமயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார். அப்போது, கைதுக்காக அதிமுக இந்த ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. கைது செய்வதை எண்ணி அதிமுக என்றும் பயப்படாது. சிறை என்பது எங்களுக்குப் புதிதல்ல. உங்கள் பூச்சாண்டியை கண்டு அதிமுக வினர் பயப்பட மாட்டோம்.




அடுத்த குறியாக, சி.வி.சண்முகம் தான் கைது செய்யப்படுவார் என்று சமூக வலைதள செய்திகள் உலாவியதை பார்த்தேன். கைது பண்ணிக்கோ! இந்த கைதுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். இரவு 3 மணிக்கு வருவது, விடியற் காலையில் வருவதெல்லாம் வேண்டாம். அப்பாயின்மென்ட் சொல்லிட்டே வரலாம். வேட்டி, சட்டை கட்டி ரெடியாக இருக்கிறோம்." நீங்க எப்ப வேன்னாலும் வரலாம் என்று காட்டமாகவும் விரிவாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுப்பார்கள் என்று கருதப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அடுத்து சி.வி.சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண