புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் பிரிக்கப்பட்டு முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. 70 வார்டுகளில் திமுக 48 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும், சுயேச்சைகள் 8 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர். விசிக, மதிமுக, தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றிருப்பதால் மேயர், துணை மேயர் ஆகிய இரண்டு பதவிகளும் திமுகவுக்கே என்பது உறுதியாகிவிட்டது.
தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால், சித்ரா தேவி தமிழ்க்குமரன், மகேஸ்வரி கார்த்திக், கல்யாணி டில்லி, வசந்தகுமாரி கமலக்கண்ணன், லிங்கேஸ்வரி ஸ்ரீ தர் குமார் ஆகியோர் தலைமையிடம் முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தற்போது திமுகவில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் ஆதரவினால் வசந்தகுமாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசந்தகுமாரி பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். படித்து முடித்துவிட்டு சில ஆண்டுகாலம் தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார். இவருடைய கணவர் தீவிர திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர் . இந்நிலையில் இந்த தேர்தலில் வசந்தகுமாரி போட்டியிட வாய்ப்பு கிடைத்து தற்போது, தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வருவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. இவருடைய சொத்து மதிப்பு சுமார் 19 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இவருடைய கணவன் கமலக்கண்ணன் தற்பொழுது வட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை மேயர் போட்டியில் எஸ் ஆர் ராஜாவின் மைத்துனர் டி காமராஜ், ஜெகத்ரட்சகனின் மைத்துனர் ஜி. காமராஜ், பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி சகோதரர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் முயற்சி செய்தனர். இந்நிலையில் துணை மேயராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகனின் உறவினரான ஜி.காமராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் எந்தவித குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தாம்பரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி மேயர் வேட்பாளராகவும் , பல்லாவரம் பகுதியை சேர்ந்த காமராஜுக்கு துணை மேயர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வேட்பாளர் வசந்தகுமாரி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்னை மேயராகத் தேர்ந்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்த நோக்கத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன். எங்கள் குடும்பம் 42 ஆண்டுகளாக திமுகவில் உள்ளது. தற்போது என்னை மேயராக அறிவித்தது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம். தாம்பரம் மாநகராட்சி வளர்ச்சிக்காக எந்தந்த வளர்ச்சிப்பணிகள் தேவையோ அதை அனைத்தையும் செயல்படுத்துவேன். சென்னை மாநகராட்சிக்கு இணையாகத் தாம்பரம் மாநகராட்சியின் தரத்தை உயர்த்துவேன்' எனக் கூறினார்.