பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு கட்சிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளது. 


சில தினங்களுக்கு முன் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் பிடிஆர் நிர்மல் குமார், செயலாளராக இருந்த திலீப் கண்ணன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பாஜகவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில்,பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்று திராவிட கட்சிகள் வளர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருப்பது போல இந்த செயலுக்கும் எதிர்வினை இருக்கும் என விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் நேரடியாகவே அதிமுகவை விமர்சிக்க தொடங்கினர். 


இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் அண்ணாமலை கருத்துக்கு பதிலளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக என்பது  கல்வீசினால் உடையும் கண்ணாடி இல்லை. அதிமுக ஒரு பெருங்கடல், அதில் கல் வீசினால் கல் தான் காணாமல் போகும். அதிமுக எழுச்சியுடன் உள்ளதால் மற்ற கட்சி நிர்வாகிகள் விருப்பப்பட்டு இணைகின்றனர். இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அண்ணாமலை உட்பட எல்லோருக்கும் இருக்க வேண்டும். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது என தெரிவித்தார். 


மேலும் அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. அவர் தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். இதனையடுத்து அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்தது முட்டாள்தனமான செயல் என விமர்சித்துள்ளார். கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுகவை பாஜக விமர்சனம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.