மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 75 கிலோ கேக் வெட்டப்பட்டு அ.தி.மு.க.,வினருக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஊட்டினார். இந்நிழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க.வினர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,”எம்.ஜி.ஆர் நின்று வென்ற தொகுதி மதுரை மேற்கு தொகுதி. வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்து கொண்டே தானும், காங்கிரஸ் கட்சியையும் வெற்றி பெற வைத்தவர் எம்ஜிஆர்.
மதுரை மேற்கு தொகுதியில் ஜெயலலிதாவை நிற்க சொல்லி உள்ளேன். நான் எங்கு நின்றால் என்னவென்று கேட்பார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உழைத்ததெல்லாம், வாழ்ந்ததல்லாம் மக்களுக்காக மட்டுமே. ஆனால் தங்களுக்காக குடும்பத்திற்காக கட்சியை நடத்திக்கொண்டுள்ளனர் திமுக. திமுகவினர் என்ன மாற்றத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள். மக்களுக்கு எதை செய்தார்கள். சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். காமராஜர் கொண்டு வந்த திட்டம் வேறு, எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டம் வேறு, எம்ஜிஆரின் சத்துணவு திட்டத்தை கருணாநிதி நினைத்தும் முடக்க முடியவில்லை. ஏன் ஸ்டாலின் நினைத்தாலும், அவர் மகன் உதயநிதி, அவரது மகன் இன்பநிதி நினைத்தாலும் முடக்க முடியாது. இது தான் சாதனை. ஆனால் இத்தகைய சத்துணவு திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். தனது தந்தையான கலைஞருக்கு 100 கோடியில் நூலகம் அமைக்கிறார் முதல்வர். நூலகம் தேவை தான். ஆனால் மதுரைக்கு சாலை, குடிநீர் என்ற அடிப்படை வசதிகளை முதலில் செய்தீர்களா. வைகை ஆற்று பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகள், கோரிப்பாளைய பாலப்பணிகள் குறித்து மதுரை வந்த முதலமைச்சர் ஆய்வு செய்தாரா?. முதலமைச்சர் நேரடியாக பார்த்தால் தான் பணிகளை விரைவாக முடிப்பார்கள். ஆய்வு என்ற பெயரில் நாடகத்தை நடத்துகிறார்களே தவிர மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செய்யவில்லை.
இடைத்தேர்தலில் இதுவரை நடக்காத கேவலங்களை ஈரோட்டில் திமுக செய்தது. நாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் போது இடைத்தேர்தல்களில் இதுபோன்று செய்தோமா? ஈரோட்டில் இடைத்தேர்தலில் ஒரு வார்டுக்குட்பட்ட ஒவ்வொரு ஆண் பெண்களுக்கு 500 ரூபாய் கொடுத்தார்கள். கூட்டமாக கூட்டிச்சென்று மக்களை அடைத்து வைத்து அவர்கள் சலிப்படைய கூடாதென வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் படங்களை போட்டடுக்காட்டி பிரியாணி, கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். ஈரோட்டுக்கு முதல்வர் வரும்போது 1000 ரூபாய் ஸ்பெக்ஷலாக மக்களுக்கு கொடுத்தார்கள். ஈரோடு கிழக்கில் 30 அமைச்சர்கள் 38 நாட்களாக குடியிருந்து காசு கொடுத்து வீடுவீடாக படியேறி வாக்கு சேகரித்தார்கள். இன்னொரு இடைத்தேர்தல் வரும் போல- இளங்கோவனை பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. பாவம் வயதானவராக உள்ளார். இன்னொரு இடைத்தேர்தல் வராதா என ஈரோடு மக்கள் நினைக்கிறார்கள். இளங்கோவன் 100 ஆண்டு நலமாக இருக்க வேண்டும். நல்ல நபராக தேர்தலில் நிற்க வைக்க கூட திமுகவால் முடியவில்லை.
ஈரோட்டில் கமல் வேறு திமுகவோடு சேர்ந்து கொண்டு புதுநாடகம் நடத்தினார். இந்த சினிமாக்காரன் என்றாலே ஒரு புது வேஷம் தான். கமல் ஒரு நாடகம். அவருக்கும் ஈரோட்டில் 1000 ரூபாய் கொடுத்து தான் அழைத்து சென்றார்கள். உதயநிதி யார் வந்தாலும் 1000ரூபாய் கொடுத்தார்கள். காங்கிரசை அழிக்க வேண்டும் என பெரியார் நினைத்தார். அப்படிப்பட்ட காங்கிரசுக்கு முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் வாக்கு சேகரித்தனர். பெரியார் எதிர்த்ததால் தான் தமிழகத்தில் 50 ஆண்டுகள் தேசிய கட்சி ஆட்சிக்கே வர முடியவில்லை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆணையத்திற்கு இது ஒரு கரும்புள்ளி. மோசமான தேர்தல். ஈரோட்டில் தேர்தல் ஆணையம் எதையுமே கண்டுகொள்ளவில்லை. ஈரோடு கிழக்கில் எடப்படியார் செல்வாக்கை மறைக்க முடியவில்லை. இத்தனை செய்தும் அதிமுகவை டெபாசிட் வாங்க முடியாமல் செய்ய முடிந்ததா கலைஞர் கூட ஸ்டாலினை அவ்வளவு சீக்கிரமாக கொண்டு வரவில்லை. ஆனால் ஸ்டாலினோ தனது மகனை இளைஞரணி செயலாளராக்கி, அமைச்சராக்கி விட்டார். ஸ்டாலின் தனது மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்துள்ளார். யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஒருவர் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்ல எல்லா உரிமையும் உண்டு. ஏன் பிற கட்சிக்கு செல்கிறீர்கள் என கேட்க யாருக்கு எந்த யோக்கிதையும் இல்லை என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்