தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரத்தில் பூகம்பம் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் தங்களுக்கு ஆதரவாக இல்லாத அதிமுகவின் நிர்வாகிகளை நீக்கியும், பதவி கொடுத்தும் அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்தநிலையில், அதிமுக கட்சி யாருக்கு என்ற வழக்கு உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. 


இதன் தொடர்ச்சியாக ஓ. பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அளித்தனர். 


இருப்பினும், சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களை அதே இருக்கையில் உட்கார அனுமதியளித்தார். 


சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் :


எதிர்க்கட்சித் துணைத்தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேற்று சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட, பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை அவைக் காவலர்கள் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். 


இதையடுத்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நியாயமாக, நடுநிலையோடு செயல்படக்கூடிய செயலை செய்யாமல், சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக பார்க்கிறோம். திமுக தலைவர் ஆலோசனைபடியே சபாநாயகர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர் சட்டமன்ற சபாநாயகர் மூலமாக எங்களை பழிவாங்க நினைக்கிறார்” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து, எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை ஏற்க மறுத்ததை கண்டித்து அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டமானது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள் உண்ணாவிரதமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அதிமுகவினர் கடிதம் அளித்தனர். 


ஆனால், இன்று நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டது.


இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுகவின் சில உறுப்பினர்களை காவல்துரையினர் கைது செய்தநிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆளும் திமுக கட்சியினரை எதிர்த்து முழக்கமிட்டு வந்தனர்.


இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உட்பட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.