”நியாயம் தோற்காது. உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட ஜெயலலிதா என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்” என சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம், சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது எனக் குறிப்பிட்டு, சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சிவகுமார் ஆகிய நால்வரிடம் விசாரணை செய்ய பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவை பின்வருமாறு:
’பழி எனக்கு புதிதல்ல’
”என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. என்றைக்கு நான் ஜெயலலிதா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்கமுடியாது. ஆனால் அதே ஈமயம் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டவுடன், என் மனதில் தோன்றியது என்னவென்றால், ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகிய முக்கிய அரசியல் தலைவர்கள், அவருக்கு மிகவும் பரிச்சயமானவர்கள், அவரின் நலனுக்காக பாடுபட்டவர்கள் என்று எல்லோரையும் அழைத்து, கழக முன்னோடிகள், நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பெரிய அளவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்துவது.
’கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் எண்ணம் நிறைவேறியது’
ஜெயலலிதா ஏழை எளிய மக்கள் பயனுறும் வகையில் மக்களுக்காக ஆற்றிய சேவைகள், எண்ணிலடங்கா மக்கள் நலப்பணிகள் ஆகியவற்றை மனதில் வைத்து, அதனைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் ஜெயலலிதாவின் பெயரில் மக்கள் நலத் திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் கழகத் தொண்டர்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோருக்கு பலனளிக்கும் வகையில் தொடர்ந்து உதவிகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.
ஆனால் விதி வசத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. இங்கு இருந்தவர்கள் என்ன செய்தார்கள், எனத மாதித்தார்கள் என்பதை கழகத் தொண்டர்களும், நாட்டு மக்களும் நன்றாக அறிவார்கள். ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக, அவருடைய மரணத்தையே அரசியலாக்கியவர்கள் கழகத்துக்கு எதிரானவர்கள், கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் குறிப்பாக திமுகவினர் ஜெயலலிதாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த நினைத்தது நிறைவேறியது. அதற்கு நம் கட்சியினரே பலிகடா ஆனார்கள் என்பது தான் மிகவும் வேதனையான ஒன்று.
நானும் ஜெயலலிதாவும் நட்புக்கு இலக்கணம்
என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு ஜெயலலிதாவின் மரணத்தை சச்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையான ஒன்று. நானும், ஜெயலலிதாவும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் என்றைக்கும் நல்ல சகோதரிகளாக, நட்புக்கு இலக்கணமாகவே வாழ்ந்தோம். இது இறைவன் இப்பிறவியில் எனக்களித்த பெரும் வரமாக எண்ணுகிறேன்.
ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.
தொண்டர்களுக்கு புரியும்...
தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாக சொவ்கிறார்கள் எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரித்து கொண்டே இருக்கலாம். ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது.
ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் கிடையாது. அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டுக்கு திரும்ப இருந்த நிலையில் துரதிஷ்டவசமாக தம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரித்துகொண்டுள்ளனர்.
’அதிகார வரம்பை மீறிய விசாரணை ஆணையம்’
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதின் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால் ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தது
உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 30-11 2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது. அதாவது ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தது.
ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்துக்கோ உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
’திட்டமிட்டே இருவரும் பிரிந்திருந்தோம்’
நானும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு ஒருவருக்கொருவர் துணையாக ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கிறோம். ஜெயலலிதாவே தெரிவிந்தது போல் உற்ற சகோதராக உயிர்த் தோழியாக, இன்னும் சொல்லபோனால் அவருக்கு தாயாக இருந்து பாதுகாத்து வந்துள்ளேன்.
என்னையும் ஜெயலலிதாவையும் எப்படியாவது பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரும் நானும் சிறிது காலம் பிரித்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம்.
இந்தச் சதியில் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் ஜெயலலிதாவுடன் இருந்து வந்தேன் .2012 முதல் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்? யார் இதுபற்றி ஆணையத்திடம் சொன்னது? இறந்துபோன ஜெயலலிதாவும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை.
அப்படி இருக்கும்போது இப்படி ஒரு பொய்யான அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன, அதன் உள்நோக்கம் என்ன? இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
மருத்துவ சிகிச்சையில் தலையிடவில்லை..
இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது.
எத்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவக் குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள். என்னுடைய நோக்கமெல்லாம் ஜெயலலிதாவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பது தான்.
என்னுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்ககூடிய அளவில் அப்பல்லோ மருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை, உலக அளவில் சிறப்புகளைப் பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள்.
மேலும் ஜெயலலிதாவின் உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை ஏற்கனவே அதே மருத்துவமனையில் செய்து இருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை நேர்ந்தெடுத்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம். வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நாள் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை.
’எந்த விசாரணையையும் சந்திக்க தயார்!’
அதேபோன்று ஜெயலலிதாவுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்தத் தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் முடிவு எடுத்தார்கள்.
ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள். பொதுமக்களும் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.
நம் தலைவர்களின் பெயரையும் புகழையும் யாராலும் அவ்வளவு எளிதில் அழித்து விடமுடியாது. நான் இருக்கின்றவரை, இந்த மனித இனம் இருக்கின்றவரை நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோர் பெயர் இப்பூவுலகில் நிலைத்து நிற்கும் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவிந்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.