எடப்பாடி பழனிசாமி யாருடனும் இணக்கமாக செல்லக்கூடிய பழக்கம் இல்லாதவர் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெத்தின சபாபதி தெரிவித்துள்ளார். அதோடு, கட்சியை ஒற்றுமையுடன் அழைத்துச் செல்லக்கூடிய தகுதியும் அவருக்கு கிடையாது என்றும் எடப்பாடி பழனிசாமி பற்றி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள திருமயத்தில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தின சபாபதி கட்சிக்குள் நிலவும் பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து மனம் திறந்தார்.
அப்போது பேசுகையில், ”சசிகலாவை ஒதுக்கி வைத்தபோதே நான் எதிர்ப்பு குரல் கொடுத்தவன். டி.டி.வி. தினகரனை கட்சியில் இருந்து விலகும்போது கூட அவரை விலக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உடன் நேரடியாக பேசினேன். கட்சி ஒன்று சேர வேண்டும் என்பதிலும், அப்போதுதான் கட்சியின் வெற்றி உறுதியாகும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார் சசிகலா. அதிமுகவை ஒருங்கிணைப்போம் என்ற நல்லெண்ணத்துடன் இருப்பவர் சசிகலா” என்று தெரிவித்துள்ளார்.
கட்சி ஒன்றிணைவது குறித்து பேசுகையில், “அதிமுக ஒன்றிணையும் தருணம் என்றால், எடப்பாடி மற்றும் அவரை சேர்ந்தவர்களை தவிர மற்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும் எண்ணம் இருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் இருந்து தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது.” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில்.” எடப்பாடி பழனிச்சாமி யாரோடும் இணக்கமாக செல்லக்கூடிய பழக்கம் இல்லாதவர்; சட்டமன்ற உறுப்பினர்களையும் மாவட்ட செயலாளர்களையும் விலை கொடுத்து வாங்கும் திறமையை தவிர வேறு ஏதும் அவரிடம் இல்லை. கட்சியை ஒற்றுமையாக அழைத்துச்செல்லக்கூடிய தகுதியும் அவரிடம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..