நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்து வருகிறது. 


தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்திருந்தது.


தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு:


இந்நிலையில், இன்றைய விசாரணையில், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நடைமுறையில் இருக்கும் திருமண முறையை தன்பாலின திருமணத்திற்கு இணையாக கருதுவது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும் என மத்திய அரசு வாதிட்டுள்ளது.


தன்பாலின திருமணத்திற்கு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கினால் அது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த சட்டத்தையும் மாற்றி அமைப்பதாக பொருள்படும். இம்மாதிரியான உத்தரவை பிறப்பிதை நீதிமன்றம் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


"எல்லா கிராமப்புற, நகர்ப்புற மக்களின் பரந்த கருத்துக்கள், தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் திருமணத் துறையை நிர்வகிக்கும் பழக்கவழக்கங்களை மனதில் வைத்து மதப் பிரிவுகளின் கருத்துக்கள் மற்றும் அதன் தவிர்க்க முடியாத அடுக்கடுக்கான விளைவுகள் ஆகியவற்றை நாடாளுமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 


மேலும் உரிமைகளை நிலைநாட்டுதல், உறவுகளை அங்கீகரித்தல் மற்றும் அத்தகைய உறவுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குதல் ஆகியவை சட்டமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும். நீதித்துறையால் அல்ல. இது அரசியலமைப்பின் VII அட்டவணையின் பட்டியல் III இன் என்ட்ரி 5 இன் கீழ் முற்றிலும் அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. இது பொருத்தமான சட்டமன்றத்தால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.


உரிமை சார்ந்த விஷயமாக உரிமை கோர முடியாது:


ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்குதல் அல்லது அங்கீகரிப்பது முற்றிலும் உரிமை அல்லது விருப்பம் சார்ந்த விஷயமாக உரிமை கோர முடியாது. அடிப்படை உரிமை அல்ல" என மத்திய அரசு வாதம் முன்வைத்துள்ளது.


இந்த வழக்கை விசாரிக்க இந்திய தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வை உருவாக்கி உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமர்வில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இந்திய தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சய் கிஷன் கவுல், வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளார். வழக்கமாக, அரசியல் சாசன அமர்வில் இணை நீதிபதியாக இரண்டாவது மூத்த நீதிபதி நியமிக்கப்பட மாட்டார்.


இந்த வழக்கின் விசாரணை நாளை தொடங்கப்பட உள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த 2018ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பிறகும், மாற்று பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் இந்திய சமூகம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்றும் LGBT சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.