2016-21 வரையிலான பதவிக்காலத்தின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையியனர் சோதனை நடத்தி வருகின்றனர். 


புதுக்கோட்டை மாவட்டம் ஊழல் தடுப்பு  காவல் நிலையத்தில், லஞ்சஒழிப்பு காவல்துறை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை  இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், 1988 வருட ஊழல் தடுப்பு சட்டம் [13(1-c), 13(2)], இந்திய தண்டனைச் சட்டம், 2018 வருட ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இந்த சட்டப்பிரிவுகளின் கீழ், அரசுப் பணியாளர் (அமைச்சர் உட்பட) என்ற முறையில் தன் நிரவாகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்ட பொது சொத்தை எதனையும், நேர்மையற்ற முறையுலோ அல்லது மோசடியாகவோ கையாடல் செய்வாராயின், அல்லது பிறவாறு தனது சொந்த பயனுக்காக மாற்றிக் கொள்வாராயின், அல்லது பிறர் அவ்வாறு செய்ய அனுமதிப்பாராயின், ஒராண்டு முதல் ஏழாண்டு வரை சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. 


விஜயபாஸ்கர், 2016-21 வரையிலான 5 ஆண்டு காலத்தில், பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி, ரூ.27 கோடி (27,22,56,736) வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



1 .2016ம் ஆண்டு விஜயபாஸ்கர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள நிகர சொத்து மதிப்பு - 6 கோடி (ரூபாய் 6,41,91,310)


2.a 2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது துணைவியாரின்  சட்டப்பூர்வ வருமானம்- ரூபாய்.58 கோடி (58,64,25,887).   


2.b 2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில்  விஜயபாஸ்கர் மற்றும் அவரது துணைவியார் மேற்கொண்ட செலவீனம்- ருபாய் - 34 கோடி (34,51,62,529) 


2.c எனவே, 2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது துணைவியாரின் சேமிப்பு தொகை ரூபாய்- 24 கோடி (24,12,63,358)  2(a)- 2(b) 


3. 2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் மட்டும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் 57 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


4. எனவே, சேமிப்புத் தொகையை (3-2c) விட கூடுதலாக 27 கோடி (27,22,56,736) வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது. 


மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில், இழுப்பூர் கிராமத்தில் விஜயபாஸ்கரின் குடும்ப உறுப்பினர்கள் பேரில் மதர் தெரசா கல்வி மற்றும் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் 14 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் தான் இந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.