தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரித்து வருவதை கண்டித்து வரும் 12 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


போதைப் பொருள் நடமாட்டம்:


இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், “ உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் செயல்பாட்டில் உள்ளது. போதைப் பொருள் நடமாட்டம் குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் தெளிவாக பேசி உள்ளேன். பள்ளி மற்றும் கல்லூரி அருகில் போதை பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தேன்.


முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்:


தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது வேதனைக்குரிய விஷயம். ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன. இத்தனை வழக்குகள் உள்ள ஒரு நபர், முதலமைச்சர் குடும்பத்தோடு நெருங்கி பழகியது வேதனையும் வருத்தையும் அளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். இதில் முதல்வர் குடும்பத்தினர் தொடர்புள்ளதால் அதனை விளக்க வேண்டிய தார்மீக கடமை முதலமைச்சருக்கு உள்ளது. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 149 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை ஆளும் கட்சியின் ஏவல் துறையாக உள்ளது. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.


பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தையா?


பத்திரிகையாளர் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் போதை பொருள் கடத்தி கைதாகி உள்ளார் என்றால் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே தலைகுனிவு தான். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும்.  பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் வெளிப்படையாக அறிவிப்போம்


இதற்கு முன்பு ஒரு டி.ஜி.பி இருந்தார் அவர் சைக்கிளில் மட்டுமே செல்வார்.  சைலேந்திர பாபு இருக்கும் போது 2.0 ; 3.0 என இப்படி பல ஆபரேஷன் சொல்லி ரீடைர்மென் ஆகி உள்ளார். நான் ஆட்சியில் இருந்த வரை போதை பொருள் கடத்தல் போன்ற செயல்கள் நடக்கவில்லை. தற்போது இருக்கும் அரசு தான் தகுந்த நடவடிக்கை எடுக்கக் வேண்டும். விரைவில் அதிமுக சார்பில் ஆளுநரை சந்தித்து திமுக ஆட்சியில் போதை பொருள் அதிகரித்து வருவது தொடர்பாக மனு  வழங்க உள்ளோம். இதனை கண்டித்து அனைத்து மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் வருகின்ற 12 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.