விழுப்புரம்: திண்டிவனத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியை விற்பதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த ஆசிரியர் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
தனியார் மெட்ரிக் பள்ளி விற்பனை
திண்டிவனம் அருகே உள்ள ஆலகிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 45). சோழியநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தயாநிதி (44), அவரது மனைவி அனிதா (40). இவர்களில் தயாநிதி, நெடிமோழியனூரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், அனிதா, சோழியநெற்குணத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் சோழியநெற்குணம் கிராமத்தில் சொந்தமாக எஸ்.கே.டி. என்ற பெயரில் மெட்ரிக் பள்ளியை நடத்தி வந்தனர். அப்பள்ளியை அவர்கள் இருவரும் விற்பனை செய்ய கடந்த 2022-ல் முடிவு செய்தனர். இதையறிந்த ஜெயமூர்த்தி மற்றும் சிலர், சோழியநெற்குணத்தில் உள்ள அப்பள்ளிக்கு சென்று தயாநிதி, அனிதா ஆகியோரிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும் ரூ.2 கோடியே 10 லட்சத்துக்கு அப்பள்ளியை விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டனர்.
பதிவு செய்யாத ஒப்பந்தம்
இதற்காக அவர்கள் இருவரும் ஜெயமூர்த்தி உள்ளிட்டோரிடம் பல தவணைகளில் ரூ.75 லட்சத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு 13.11.2022 அன்று 50 ரூபாய் பத்திரத்தில் தங்கள் பள்ளியை விற்பனை செய்ய ஒரு பதிவு செய்யாத விற்கிரைய உடன்படிக்கையை எழுதிக்கொடுத்தனர். பின்னர் ஜெயமூர்த்தி உள்ளிட்டோரிடம் அவர்கள் இருவரும் தாங்கள் நடத்தி வந்த மெட்ரிக் பள்ளியை ஒப்படைத்தனர். அதன் பிறகு ஜெயமூர்த்தி, அப்பள்ளியின் பெயரை மாற்றம் செய்து பள்ளியை நடத்தியுள்ளார். இந்நிலையில் தயாநிதி, அனிதா ஆகியோரிடம் ஜெயமூர்த்தி சென்று பள்ளிக்குரிய அசல் ஆவணங்களை கேட்டார்.
அதற்கு அவர்கள் இருவரும் பள்ளியின் அசல் ஆவணங்களை நிதி நிறுவனத்தில் வைத்து கடன் வாங்கியுள்ளதாகவும், மேலும் ரூ.1 கோடி கொடுத்தால்தான் அசல் ஆவணங்களை தருவோம் என்று கூறியுள்ளனர். இதனால் பள்ளி அமைந்துள்ள இடத்தில் வில்லங்கம் உள்ளது என்று எண்ணிய ஜெயமூர்த்தி, அவர்கள் இருவரிடமும் சென்று அசல் ஆவணத்தை எடுத்து வந்தால்தான் நாங்கள் பணம் தருவோம், இல்லையெனில் எங்கள் பணத்தை திருப்பித்தாருங்கள் என்று கேட்டதோடு அப்பள்ளியை கடந்த 2023 ஜூன் மாதத்தில் அவர்கள் இருவரிடமும் ஒப்படைத்துள்ளார்.
ரூ.1 கோடி மோசடி
அதன் பிறகு தயாநிதி, அனிதா ஆகிய இருவரும் அப்பள்ளியை ஜெயமூர்த்திக்கு விற்பனை செய்யாமல் மோசடி செய்து புதுச்சேரியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு விற்பனை செய்ததோடு அதில் வந்த பணத்தின் மூலம் ஜெயமூர்த்தியிடம் ஏற்கனவே வாங்கியிருந்த முன்பணத்தை திருப்பிக்கொடுக்காமல் இருந்துள்ளனர். இதையறிந்த ஜெயமூர்த்தி, அவர்கள் இருவரிடமும் சென்று பள்ளியை எங்களுக்கு தராமல் ஏமாற்றி மற்றொரு நபருக்கு விற்பனை செய்து விட்டீர்கள் என்றும், நாங்கள் கொடுத்த பணம் ரூ.75 லட்சத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு அவர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதேபோல் அவர்கள் இருவரும் அப்பள்ளியை விற்பதாக கூறி புதுச்சேரியை சேர்ந்த பழனி மனைவி லதா என்பவரிடமும் ரூ.25 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டனர்.
ஆசிரியர் தம்பதியினர் கைது
இதுகுறித்து ஜெயமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாநிதி, அனிதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார், திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனியார் மெட்ரிக் பள்ளியை விற்பதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியினர் கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.