அதிமுகவில் அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வாரம் வெளியான அறிக்கையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை காலை 10 மணிக்கு தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர். இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாகவும், கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது.
அதிமுகவில் தொடரும் மோதல்கள்
அதிமுகவில் கடந்த சில மாதங்கள் பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என இரட்டை தலைமையாக செயலபட்டு வந்த அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதோடு அவர்களின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அந்த பதவிகளில் தனக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கினார்.
இப்படி மாறி மாறி இருதரப்பும் மோதலில் ஈடுபட்ட வந்த நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதும், அதிமுக பொதுக்குழுவும் செல்லாது எனக்கூறி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் உள்ள நிலையில் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனையடுத்து கட்சிக்கொடி,சின்னம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓபிஎஸ்க்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என்றும், அதிமுக எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதற்கு எதிராக இபிஎஸ் செயல்படுவதாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.