அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவை குறிவைத்து பாஜக வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணி உறுதியாகியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக திட்டமிட்டு வருகிறது.


அதிமுக - பாஜக கூட்டணி:


கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அதன் பிறகு, அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர். வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டார்.  


கூட்டணியில் சலசலப்பு:


இதனால், இருகட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல்களில் ஈடுபட்டு விமர்சித்துக் கொண்டனர். அதேநேரம், அண்ணாமலை பேசுவது சரியில்லை அவருடன் தான் மோதலே தவிர, பாஜக உடன் கிடையாது என சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசினர். இதனிடயே, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்களுக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.  இதனை அடுத்து, சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


கூட்டணியில் பாஜக இல்லை:






இதுகுறித்து கே.பி.முனுசாமி கூறுகையில், "பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது.  இதற்கான தீர்மானம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பே உருவாக்கிவிட்டது. ஓராண்டாகத் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அண்ணா, ஜெயலலிதாவை பாஜக விமர்சித்து வருகிறது. மதுரையில் நடந்த அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டையும் பாஜக சிறுமைப்படுத்தியது. இதனால், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூட்டணியில் இருந்து பாஜக விலகுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும்" என்று தெரிவித்தார்.