சென்னையில் பெருமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதற்கு இடையே ஒவ்வொரு கட்சியினரும் வெள்ளம் பாதித்த மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று கொளத்தூர் தொகுதியில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சென்று மக்களைச் சந்தித்து வந்ததை ட்விட்டரில் சிலர் கலாய்த்துத் தீர்த்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று ட்வீட் செய்துள்ள அந்தக் கட்சியின் உறுப்பினரான நடிகர் குஷ்பு ‘வெறிகொண்டு சுற்றும் திமுகவினர் வேலையில்லாமல் இருப்பதால்தான் இதனைச் செய்வதாகவும் அவர்களுக்கு எதாவது வேலை தரும்படியும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்தார். 


 






ஆனால் திமுகவினரைக் கலாய்க்கும் வகையில் குஷ்பு செய்த ட்வீட் அவருக்கு விணையாக வந்தது. ’திமுக தம்பிகள்’ எனக் கூற வந்த அவர் எழுத்துப்பிழையால் ’திமுக தம்பதிகள்’ என ட்வீட் செய்ததால்  ஒரு நிமிடம் திக்குமுக்காடிய ட்விட்டர் வாசிகள் ‘ஏது திமுகவுல தம்பதிங்க தகராறா?’ என ஒரு நிமிடம் திணறி பிறகு சுதாரித்துக் கொண்டனர். 


முன்னதாக, சென்னை மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் பார்வையிடும் இடங்கள் பற்றி போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை புகார் எழுப்பியிருந்தார். 






சென்னையில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழையால் சாலைகளில் நீர் தேங்கி மக்கள் வசிக்கும் பகுதிகள் குளங்களாக மாறி வருகின்றன. செம்பரம்பாக்கம் அணையில் நீர் திறக்கப்பட்டதை அடுத்து கரையோரம் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். முதலமைச்சர் பார்வையிடும் பகுதிகள் பற்றி அரசின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டும் வருகிறது.இதற்கிடையே முதலமைச்சர் பார்வையிடும் பகுதிகள் போட்டோஷாப் செய்யப்பட்டு பகிரப்படுகின்றன மேலும் முதலமைச்சரை நெருங்காத வகையில் மக்கள் வீடுகளைச் சுற்றிக் கயிறுகள் கட்டப்படுகின்றன இதுதான் திமுக அரசின் மாடல் எனக் குற்றம் சாட்டி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை. இன்று முதல்வரின் கொளத்தூர் தொகுதிக்குச் சென்று பார்வையிட்ட அவர் இதனைப் பகிர்ந்தார்