ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தாகிவிட்டது. அங்கு போட்டியிடப்போவது திமுக-வா, காங்கிரஸா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதேபோல், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடப்போவது அதிமுக-வா, தமாகா-வா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது ஆளும் கட்சியாக அசுர பலத்துடன் இருக்கும் திமுக, இந்தத்தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து, இரு பரிந்துரைகளைக் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, மறைந்த திருமகனின்  தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவனோ அல்லது மறைந்த திருமகனின் மனைவி பூர்ணிமாவோ போட்டியிடுவதாக இருந்தால், காங்கிரஸுக்கு அந்தத் தொகுதி வழங்கப்படும் என்றும் இல்லையென்றால், ஆளும் திமுக-வே அந்த இடத்தில் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பதிலளிக்குமாறு ஈவிகேஎஸ்  இளங்கோவனை, தமிழக காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்குள் பதில் அளிப்பதாக, ஈவிகேஎஸ் தெரிவித்துள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இந்தத் தொகுதியில், தற்போதைக்கு தங்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளதாக ஈரோடு திமுக, தமது தலைமையகத்திற்குத் தெரிவித்துள்ளது. மறைந்த  திருமகனின் குடும்பத்தினர் போட்டியிடவில்லை என்றால், ஆளும் திமுக-வே இம்முறை அங்கு களத்தில் இறங்கும் என்றும் தலைமை குழப்பத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தராது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஈவிகேஎஸ் இளங்கோவின் பதிலை நோக்கி காங்கிரஸ் கட்சியும் திமுக-வும் இரண்டு நாட்கள் காத்திருக்கும் எனத் தெரிகிறது. 


இந்தச் சூழலில், கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில் அங்கு தமாகா சார்பில் களமிறங்கிய யுவ்ராஜ், இம்முறையும் அங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் மூலம் அதிமுக-வின் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசி வருகிறார். கடந்த முறை, இரட்டை இலை சின்னத்தில்தான் தமாகா வேட்பாளர் போட்டியிட்டார் என்பதால், இம்முறை அதிமுக வேட்பாளரையே நேரடியாக களம் இறக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தற்போது அதிமுக தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், ஓபிஎஸ் மூலம் ஏதேனும்  பிரச்சினைகள் வந்தால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமோ என்ற அச்சமும் எடப்பாடியார் தரப்பில் நிலவுகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் அங்கு போட்டியிடுவது யார் என்பதில் குழப்பம் காணப்படுகிறது. ஆனால், கூட்டணி தர்மத்தின்படி, தங்களுக்கே ஈரோடு கிழக்குத்  தொகுதியில் போட்டியிட வாய்ப்புத் தர வேண்டும் என ஜி.கே. வாசன் உறுதியாகக் கேட்டு வருகிறார். 


தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தமட்டில், அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச்சூழலில், இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. அதேபோல், அனைத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே நடைமுறைக்கு வந்தன என்று இந்தியதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.