சென்னையில் கடந்த சில நாட்களாகவே அன்றாட கொரோனா பதிவு அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தாதோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அறிவுறுத்தியுள்ளார்.


கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் கொரோனா 2வது அலை ஏற்பட்டது. அப்போது, டெல்டா வைரஸின் தாக்கம் கோர முகத்தைக் காட்டியது. நாடு முழுவதும் அன்றாடம் 2 லட்சம் பேர் வரை தொற்று உறுதியானது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை கலங்க வைத்தது. கொரோனா உயிரிழப்புகளால் மயானங்கள் கூட நிரம்பி வழிந்தன. மின் மயானங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இயந்திரங்கள் பழுதாகிய அவலநிலை ஏற்பட்டது.


ஜூன், ஜூலையில் இருந்து டெல்டாவின் தீவிரம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அதன் பின்னர் நாடு முழுவதும் தடுப்பூசித் திட்டமும் வேகமெடுத்தது. இன்றைய நிலவரப்படி 143.15 கோடி பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது நாட்டில் ஓமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 781 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.




சென்னையில் அதிகரிக்கும் தொற்று:


இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த 4 வாரங்களாக சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் 194 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சென்னை மக்கள் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டக் கூடாது, கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 


அமைச்சர் கூறும்போது இதுவரை ஓமிக்ரான் உறுதியானவர்கள் அனைவருமே அறிகுறிகள் இல்லாதவர்கள் என்று தெரிவித்தார். அதேபோல் பலரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என்றும் கூறினார். இதனாலேயே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் அலட்சியம் காட்டாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஓமிக்ரான் பரவும் தன்மை அதிகமென்பதால், அது சமூகப்பரவலானால் அமெரிக்கா, பிரிட்டன் போல் அன்றாடம் 2 லட்சம் மூன்று லட்சம் ஏன் இந்திய மக்கள் தொகையைக் கணக்கிடும்போது இன்னும் மிகமிக அதிகமாக பாதிப்பு ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 9,195 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 302 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலையில் 77,002 பேர் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளனர்.