கடந்த 6 வருடமாக ஆன்மீக பயிற்சியை கொடுத்து வருவதாகவும், தான் சாமியார் இல்லை என்றும் அன்னபூரணி அரசு அம்மா கூறினார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்னபூரணி அரசு அம்மா, புகார் கொடுத்ததை கொடுத்தது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது, “என்னைப் பற்றி தவறான அவதூறுகளை சமூகவலைதளங்களில் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக, கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்துள்ளேன். என்னை வந்து போலி சாமியார், சாமியார் என தேவையில்லாத விஷயங்களில் அவதூறு பரப்புகிறார்கள். நான் இங்கு வந்ததே ஆன்மிக பணியை செய்வதற்குதான். என்னுடைய வேலையும் அதுதான். ஆன்மீக பயிற்சி கொடுத்து தீட்சை கொடுத்து வருகிறேன். என்னை சாமியார் என்று சொல்கிறவர்கள். என்னிடம் பயிற்சி பெற்று தீட்சை வாங்கியவர்களுக்கு தெரியும். நான் என்னாவ இருக்கிறேன் என்று என்னை உணர்ந்தவர்களுக்குதான் தெரியும். பார்க்கிறவர்களுக்கு தெரியாது. என்னை பெண் சாமியர் என்கின்றனர். நான் சாமியார் இல்லை. நான் தலைமறைவு என்ற செய்திகள் வருவது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். என் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்தது தொடர்பான எந்த ஒரு தகவலும் எனக்கு வரவில்லை. என்னை காவல் நிலையத்தில் இருந்து யாரும் அழைக்கவில்லை” என்றார்.
திடீர்னு சாமியார் ஆனது எப்படி என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “உங்களுக்கு இப்போது தெரிகிறது. நான் திடீரென்று சாமியார் எல்லாம் ஆகவில்லை. கடந்த 6 வருடமாக ஆன்மீக பயிற்சியை கொடுத்து வருகிறேன். ஆதிபராசக்தி என்று நான் கூறவில்லை. நான் என்றைக்குமோ என்னை கடவுள், அவதாரம் என்று கூறிக்கொண்டது கிடையாது. என்னிடம் பயிற்சியில் இருந்தவர்கள் என்னை உணர்ந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் அதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “என் திருமணம் குறித்தும் அவதூறாகதான் பரப்புகின்றனர். என்னுடைய ஆன்மீக பணி தொடர்ந்து நடைபெறும். அதற்காகதான் நான் வந்தேன். வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், எந்த அருள்வாக்கும் நான் கொடுப்பதில்லை. நான் வந்ததே ஆன்மீகம் என்றால் என்ன?. கடவுள் என்றால் என்ன?. நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்து இருக்கிறீர்கள். உங்களை எந்த சக்தி இயக்கிட்டு இருக்கு என்பதை உணர்த்தவே வந்து இருக்கிறேன். அந்தப்பணியை தொடர்ந்து செய்வேன். வந்த வேலையும் அதுதான். இறுதியில் சத்யம் தான் ஜெயிக்கும். தர்மம்தான் நிலைநாட்டும்” என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்