செந்தில் பாலாஜியின் உடல்நிலை..அறுவை சிகிச்சை..நீதிமன்றக் காவல்..அமலாக்கத் துறை நடவடிக்கை என்று ஒருபக்கம் பரபரப்பாக செல்லும் வேளையில், மற்றொரு பக்கம் சத்தமில்லாமல் சில ஏற்பாடுகளை செய்து வருகிறது திமுக தலைமை.


K.N.நேரு, ஏ.வ.வேலு, துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்களிடம் மிகமுக்கியமான ஒரு ஆலோசனையை மேற்கொண்டுள்ளாராம் முதலமைச்சர் ஸ்டாலின். இது குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது பல முக்கிய தகவல்கள் கசிந்தன.


சீனியருக்கு செல்லும் மின்சாரத்துறை:


செந்தில் பாலாஜிக்குப் பின்னால் திமுக தலைமை திடமாக நிற்கிறது. அவருக்கான சட்டரீதியான மற்றும் மருத்துவ ரீதியான பாதுகாப்பை வழங்குவதில் மும்முரம் காட்டுகிறார் முதலமைச்சர். அதே நேரம் கட்சியையும், ஆட்சியையும் சிக்கலில்லாமல் நடத்த சில கடுமையான முடிவுகளையும் அவர் எடுக்க வேண்டியுள்ளது.


டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் ஆகியோர் பதவியில் இருக்கும் போதே, செந்தில் பாலாஜியைப் போலவே அமலாக்கத் துறை ரேடாரில் சிக்கி கைதாகினர். ஓராண்டாகியும் இன்னமும் சிறையிலேயே உள்ளனர்.


அமலாக்கத் துறை கைதுகளில் ஜாமீன் பெறுவது கடினம் என்று கூறப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக அமைச்சரவையில் யாரையாவது கொண்டுவரவேண்டிய தேவை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்படும். இந்த சிக்கல் குறித்து தான் சீனியர்களிடம் ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின்.


யார் அந்த சீனியர்...அதிரும் அறிவாலயம்:


அப்போது, நம்பிக்கைக்குரியவரான செந்தில் பாலாஜி இக்கட்டான நிலையில் இருக்கும் போது, புதிதாக ஒருவரை அமைச்சரவைக்குள் கொண்டுவருவது குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ளாராம். எனவே, செந்தில் பாலாஜியிடம் இருக்கும் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை ஆகிய துறைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சீனியர் அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்பாக பிரித்து வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம் முதலமைச்சர்.


யார் அந்த சீனியர்கள் என்று விசாரித்தபோது, மின்சார துறை தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைதுறைகள் ஐ. பெரியசாமிக்கும் கூடுதலாக கொடுக்கப்படலாம் என்று ஆச்சரிய தகவல் கூறப்படுகிறது. ஸ்டாலினுக்கு மிகவும் நம்பிக்கையானவரான தங்கம் தென்னரசுவுக்கு சமீபத்தைய அமைச்சரவை மாற்றத்தில் தான் நிதி அமைச்சராக பதவி உயர்வு தரப்பட்டது. 


தற்போது மீண்டும் மிகமுக்கியமான மின்சாரத் துறை அவரிடம் தரப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் ஐ. பெரியசாமி பல மாதங்களாகவே, சீனியரான தனக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு தரப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.


செந்தில் பாலாஜி இல்லாத அமைச்சரவையை பாதிக்காமல் காத்துக்கொள்ளும் அதே நேரத்தில், கட்சிக்குள் வேறு எந்த புதிய சிக்கலும் வந்துவிடாமலும் நடவடிக்கை எடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளார் ஸ்டாலின். எனவே அடுத்து வரும் நாட்களும் இன்று போலவே பரபரப்புடன் நகரப்போவது உறுதி.