தமிழகத்தில் கீழடி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வரும் நிலையில், கடலுக்கடியில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மதுரைக்கு தென்கிழக்கே சிவகங்கை மாவட்டத்திற்குள் உள்ள கீழடி கிராமத்தில் செய்யப்பட 7 கட்ட தொல்லியல் ஆய்வுகளில் 2000 முதல் 2600 ஆண்டுகள் வரையிலான பல பழமை வாய்ந்த தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கீழடியில் செய்யப்பட்டு வரும் அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியக கட்டுமானம் குறித்தும் ஆய்வு நடத்தினர்.



அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,  ”கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்படவுள்ளது. புதிய கற்காலத்தில் தொடங்கி தங்க காதணிகள், பாம்படம், குறுவாள், மணிகள், பானை ஓடுகளில் தமிழி எழுத்துகள், ஆதன் கதிரன் உள்ளிட்ட பெயர் எழுதப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. நகர நாகரீகம் என்பது கங்கை சமவெளியில் இருந்துதான் தொடங்கி இருக்க வேண்டும் என்ற கருதுகோளை உடைத்து நகர நாகரீகம் கீழடியில் இருந்துதான் தொடங்கி உள்ளது என்பதை கீழடி நிரூபித்துள்ளது. கீழடியில் அமைக்கப்பட கூடிய அருங்காட்சியகம் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும்” என கூறியுள்ளார். தமிழகத்தில் கொந்தகை, அகரம், கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியை போலவே தமிழகம் முழுவதும் பல்வேறு கடல் பகுதிகளில் தொல்லியல் அகழாய்வுகள் செய்யப்படாமல் உள்ளது.



கடல்வணிகம் குறித்து அறிய முடியும்


கீழடியில் மட்டும் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று பொருட்கள் கிடைக்கும்போது, கடல் சார் பகுதிகளிலும் பல தொன்மையான பொருட்களை கண்டறிய வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு விரைவில் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்க கடல் பகுதியில் கடல்சார் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் தமிழர்களின் கடல்சார் வணிகள், கடல்சார் பயணங்கள் குறித்த உண்மைகளும் வரலாறுகளும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



கடற்கரையில் நடந்துவரும் ஆய்வு


ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சிக்கு கடற்கரை அருகே நடத்தப்பட்டு வருகிறது. கடல் கரையில் சிறிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதே போல் மற்ற வங்க கடல் பகுதியிலும் விரைவில் கடல் சார் ஆராய்ச்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக தொல்லியல் ஆய்வுகளை பொறுத்தவரை இது மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றாக இருக்கும். இதற்கான ஆலோசனைகளை தமிழக அரசு தொடங்கி உள்ள நிலையில் விரைவில் வங்கக்கடல் கரையோரத்தில் உள்ள பழமையான பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.