வணிக நிறுவனங்கள் வாடகைக்கு எடுக்கும் கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள் பாதிப்பு:
18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே, இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், வணிகர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை. ஏற்கனவே, சொத்துவரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் மின் கட்டண உயர்வால் வணிகர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று வணிக நிறுவனங்கள், மற்றும் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வணிகர்களுக்காக களத்தில் குதித்துள்ள அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்துள்ளார்.
இபிஎஸ் கண்டனம்:
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "வாடகைக் கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட சரிவில் இருந்து வணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்ற இந்த வேளையில், வாடகை கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி எனும் பெரும் சுமையை அவர்கள் தலையில் ஏற்றும் மத்திய அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த வாடகைக் கட்டடங்களுக்கான 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.