முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெறுகிறது. கடந்த இரு தினங்கள் முன்னதாகவே இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டது. முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மக்கள், காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை:
இதனை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து, நினைவிடத்துக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "இளம் வயதிலேயே நெற்றி நிறைய திருநீறு அணிந்து தெய்வபற்று உள்ளவராக விளயங்கியவர். எளிமையாக வாழ்ந்தவர். தேசிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். நாடாளுமன்றத்துலும் சட்டப்பேரவையிலும் ஒரு நேரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்கள் செல்வாக்கும் இருக்கும் தலைவர் என நிருபித்து காட்டிவர்.
"தேவரின் திருவருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைத்தது அதிமுக அரசு"
தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக போற்றி வாழ்ந்தவர். அவரின் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என எம்ஜிஆர் அறிவித்தார். தேசிய தலைவராக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவருவப்படத்தை சட்டப்பேரவையில் அதிமுக அரசு திறந்து வைத்தது. ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்தபோது, 13.5 கிலோ தங்கத்தை அவரின் திருவுருவ சிலைக்கு தங்க கவசமாக வழங்கினார்.
சென்னை நந்தனத்தில் தேவரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. தேசத்துக்காக வாழ்ந்த மாபெரும் தலைவர். மாமனிதர். அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக அதிமுக அரசு, நான் குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றி பெருமை சேர்த்தது. தேவர் பிறந்த இந்த பூமி, தெய்வீக பூமி. இங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது" என்றார்.
பழனிசாமியுடன் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே ராஜூ, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க: Thevar Jayanthi: தேசியமும், தெய்வீகமும்.. பிரம்மசாரி விரதம்.. குடும்பம் டூ அரசியல் - முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு இதுதான்..!