செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சடலத்தை அகற்றுவதில் ரயில்வே போலீசாரின் அலட்சிய போக்கு  காரணமா

 

செங்கல்பட்டு : சென்னையில் புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டம் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பிற மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சேர்ந்தவர்கள்  தங்கி பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று சென்னையின் புறநகர் மாவட்டமாக இருப்பதால் செங்கல்பட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னைக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.


 டிக்கெட் கவுண்டர் வாசலில் பிணம்


பெரும்பாலானோர் பொதுப்போக்குவரத்தை நம்பி இருக்கும் நிலையில், அவர்களுக்கு   ரயில் போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்தாக உள்ளது. அதேபோன்று தென் மாவட்டத்தை நோக்கிச் செல்லக்கூடிய ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய செங்கல்பட்டு ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. 


இந்த நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில் சடலம் இருந்தது. முதல் இரண்டு கவுண்டர்களில் பொதுமக்கள் டிக்கெட் பெற்று சென்ற நிலையில் முன்பதிவு மையத்தில் சடலம் இருந்தது.





ரயில்வே போலீசார் அலட்சியமா?


 

காலை 6 மணி முதல் சுமார் 11 மணி வரை மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் அடையாளம் தெரியாத நபர் சடலமாக இருந்த நிலையில் இது பற்றிய செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது இச்சம்பவம் தகவல் அறிந்தும் போலீசார் அலட்சியப் போக்குடன் இருந்தனர். செங்கல்பட்டு நகர போலீசார் ரயில்வே இடத்தில் உள்ளதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாத என ஒதுங்கிக் கொண்ட நிலையில், சடலத்தின் அருகிலேயே சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த  ரயில்வே போலீசார் சுமார் 11 மணி அளவில் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .



 

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அடையாளம் தெரியாத நபரின் சடலம் இருந்தது ரயில்வே போலீசாரின் அலட்சிய போக்கு ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 


தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் ?


 இரண்டு காவல் நிலைய எல்லைகள் சந்திக்கும் இடத்தில் நடைபெறும்,  குற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்கு எடுப்பதில் காவல் நிலையத்திற்கு இடையே அவ்வப்பொழுது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போன்று ரயில்வே போலீசார் மற்றும்  தமிழ்நாடு போலீசார்  ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.  


செங்கல்பட்டு பொருத்தவரை செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் ஆகிய இருவருக்கும் அவப்பொழுது இந்த எல்லை பிரச்சினை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இதற்கு நிரந்தர தீர்வு காணும் பட்சத்தில்,  குற்ற சம்பவங்களை குறைப்பது மட்டுமில்லாமல் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யவும் உறுதுணையாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.