கர்நாடக சட்டமன்ற தேர்தலில் புலிகேசி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்புமனுதாக்கல் செய்த வேட்பாளர் அன்பரசன், வாபஸ் பெற்றதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. பாஜகவின் வேண்டுகோளை ஏற்று வேட்பாளரை திரும்பப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் சார்பில் கர்நாடக தேர்தலில் வேட்புமனுதாக்கல் செய்த இரண்டு பேர் வாபஸ் பெற்ற நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி சார்பிலான வேட்பாளரும் வாபஸ் பெற்றுள்ளார்.


கர்நாடகா தேர்தல்:


கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10 தேதி நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் என்பதால், இது தேசிய கவனம் பெற்றுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. அதேநேரம், கர்நாடக தேர்தலை பயன்படுத்தி, அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தனக்கான தேவையை பூர்த்தி செய்துகொண்டுள்ளார்.


ஈபிஎஸ்-ன் திட்டம்:


அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் மூலமாக தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டாலும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டாமல் இருந்தார். இந்நிலையில் தான் கர்நாடக தேர்தலில் புலிகேசி தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் என்பவர் போட்டியிடுவார் என ஈபிஎஸ் அறிவித்தார். அதைதொடர்ந்து, தங்களது கட்சி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டியதற்கான படிவத்தில் கையெழுத்திட, தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என நீதிமன்றத்தின் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி நெருக்கடி கொடுத்தார்.


ஈபிஎஸ்-க்கு கிடைத்த வெற்றி:


அதைதொடர்ந்து, கர்நாடகாவின் தேர்தலை கருத்தில்கொண்டு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேநேரம், இந்தமுடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன மூலம், தான் நினைத்தபடியே அதிமுகவின் பொதுச்செயாளர் என தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை எடப்பாடி பழனிசாமி தனதாக்கினார்.


போட்டி வேட்பாளர்:


இதனிடையே, எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புலிசேகி நகர் தொகுதியின் வேட்பாளராக நெடுஞ்செழியன், காந்தி நகர் தொகுதியில் கே.குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனுதாக்கல் நிறைவடைந்த நிலையில், ஈபிஎஸ் சார்பில் புலிகேசி நகரில் போட்டியிட்ட அன்பரசனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரம், ஓபிஎஸ் சார்பில் கோலார் தங்கவயலில் போட்டியிட்ட அனந்தராஜ், காந்தி நகரில் போட்டியிட்ட கே.குமார் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.


வேட்புமனு வாபஸ்:


ஆனால், திடீரென இன்று ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளர்களை பின்வாங்குவதாக அறிவித்தது. அதைதொடர்ந்து, தற்போது தனது தரப்பு புலிகேசி நகர் வேட்பாளரை பின்வாங்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. அதேநேரம், இந்த வேட்பாளரை முன்னிறுத்தியதன் மூலம், அதிமுகவின் பொதுச்செயலாளர் தானே என்பதை தேர்தல் ஆணையம் மூலம் எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கச் செய்துள்ளார்.