காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிந்து முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாக சீர்கேட்டால் காஞ்சிபுரம் மாநகராட்சி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை கண்டிக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் மற்றும் சோமசுந்தரம் தலைமையில் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"திமுக கூட்டணியில் ஓட்டை"
இதன் ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டதாக கூறினார்.
விசிக தலைவர் திருமாவளவன் உடனான சந்திப்புக்கு பதில் அளித்து பேசிய வைகைசெல்வன், "திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. இது தான் தற்போதைக்கு சொல்லமுடியும். அதிமுக கூட்டணியில் ஜெகன் மூர்த்தி இருக்கிறார் என்பதற்காக காழ்ப்புணர்ச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும். இன்னும் நிறையபேர் வர உள்ளனர்" என்றார்.
கொளுத்தி போட்ட வைகைசெல்வன்:
திருச்சியில் திருமாவளவனை சந்தித்து வைகைச்செல்வன் பேசிய தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு 5 முனை போட்டியை தமிழ்நாடு அரசியல் களம் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி, தவெக தலைமையில் ஒரு கூட்டணி, இதை தவிர நாம் தமிழர் தனித்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழக அரசியலில் பரபர:
இந்த சூழலில், கடந்த 2 மாதங்களில் அரசியல் களம் மொத்தமாக மாறியுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி கடந்த ஏப்ரல் மாதம் உறுதியானது. இதன் காரணமாக, 5 முனை போட்டி 4 முனை போட்டியாக மாறியுள்ளது. இதற்கிடையே, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
குறிப்பாக, அதிமுக கூட்டணிக்கு மதிமுக தாவப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த சூழலில், திருமாவளவன், வைகைச்செல்வன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.