தேர்தல் முறைகேடுகளை விசாரிக்கத் தேர்தல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிகார் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கவும், முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் வாக்குப் பதிவு நாளில் எல்லா வாக்குச் சாவடிகளிலும் இணையவழி ஒளிபரப்பு (webcasting) மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission) முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த இணையவழி ஒளிபரப்பு முறை தற்போது 50% விழுக்காடுதான் நடைமுறையில் உள்ளது. அதிலும், பதற்றமான சாவடிகள், அசம்பாவிதம் நேரக் கூடும் என எதிர்பார்க்கும் சாவடிகளில் மட்டுமே அமலில் இருக்கிறது. இனி, அனைத்து சாவடிகளிலும் இது செயல்படுத்தப்பட்டால், கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் பெரிதும் துணை புரியும்.
இதற்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இணையவசதியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு நிகழ்வுகள் உடனுக்குடன் இணையவழியாக காட்சியோடு ஒலியும் இடம்பெறும் இதை முழுமையாகப் பதிவு செய்யும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க இந்த நடைமுறை பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம், தேர்தல் சமயங்களில் பணப் பட்டுவாடா. அனுமதிக்கப்பட்டதற்கு மேலாக பணம் எடுத்துச் செல்லுதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம், பொருள் ஆகியவற்றை எடுத்துச் செல்லுதல், வாக்குச் சாவடியில் போலி வாக்காளர்கள், ஒருவரே போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு பலமுறை வாக்களித்தல் எனப் பல முறைகேடுகளைத் தேர்தல் அலுவலர்கள் கண்டுபிடிக்கின்றனர். சில சமயம் வரம்பு மீறுவோர் ஓரிரு நாள்கள் தேர்தல் பரப்புரையில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற தொடர் நடவடிக்கைகள் தெரிவிக்கப்படுவதில்லை. காரணம், தேர்தல் முடிந்த பின், முடிவுகள், ஆட்சி அமைப்பது என அரசியல் காட்சிகளே அரங்கேறுகின்றன. இந்த முறைகேடுகள் மறக்கப்படுகின்றன. இதனால், தேர்தல் ஆணையத்தின் மீது புகார் எழுகிறது.
இவற்றைத் தவிர்க்கவும், தேர்தலைச் செம்மையாக நடத்தவும், தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்கலாம். தேர்தல் நீதிமன்றங்கள் (Poll Courts) என்ற பெயரிலான இந்த நடுவர் மன்றங்களில் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர், மாநில உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் ஆகியோரை அமைத்து விசாரித்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கை நடத்தி நிறைவு செய்ய வேண்டும். அந்தந்த மாநில தேர்தல் அலுவலகங்களில் இதற்கென தனி வழக்குரைஞர்களையும் நியமிக்கலாம்.
இந்த தேர்தல் நீதிமன்றங்களை இந்தியத் தேர்தல் ஆணையமே அமைக்கலாம். இதில் மாநில அரசுகளுக்கோ, நடுவண் அரசுக்கோ இடமில்லை என்று விதி உருவாக்கப்பட வேண்டும். மேலும், சிசிடிவி கேமரா, இணையவழிக் காட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வீடியோ பதிவுகள் போன்ற சில மின்னணு ஆவணங்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில், தேர்தல் விதி கடந்த ஆண்டு டிசம்பரில் மாற்றப்பட்டது. அதைப் போன்ற கட்டுப்பாடு இந்த நீதிமன்ற விசாரணைகளிலும் கடைப்பிடிப்பதால், வழக்கு விரைவில் முடிய வழியேற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.