பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.

Continues below advertisement

பொதுக்குழு விவகாரம்:

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்த நிலையில், அவ்வப்போது எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்தாண்டு ஜூன் மாதத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

Continues below advertisement

இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டார். 

மாறுபட்ட தீர்ப்பு: 

இந்த சூழலில் பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இதில் முதலில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வந்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் 2 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்:

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதன் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கில் விசாரணை நடந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பில் பல வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. பின்னர், ஒருவாரம் கழித்து மீண்டும் ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை நடந்தது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஜனவரி 16 ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர். 

இதனையடுத்து, ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்த நிலையில், இபிஎஸ் தரப்பில் 39 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், இவ்வழக்கில் இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டிய நிலை உள்ளது.

தீர்ப்பு யாருக்கு சாதகம்?

இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெளியாகிறது. 

இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்பவே எழுந்துள்ளது. உச்சநீதிமன்றம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என ஓபிஎஸ் தரப்பு முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. அதேசமயம் ஓபிஎஸ், இபிஎஸ் தவிர்த்து இந்த தீர்ப்பு லட்சக்கணக்கான தொண்டர்களின் மனதில் எழுந்துள்ள வருங்கால அதிமுகவை நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு பதிலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.