பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறனை நம்ப வைத்தவர்கள்தான் நிதி வசூலில் ஈடுபட்டதாக தயா மோகன் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளரான தயா மோகன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,


தலைவர் பிரபாகரனின் வீரமரணத்தை உலகிற்கு தெரிவித்தோம். விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் கருத்து, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது, உலக நாடுகள் விதித்த தடையை நீக்குவதற்கான முன்னெடுப்பை ஏற்படுத்தி வருகிறோம். இந்நிலையில், இதுபோன்ற கருத்து தடையை நீட்டிக்க வைப்பதற்கான முயற்சியே.  பிரபாகரன் மரணத்தின் மீதான அறிவிப்பை தடுத்த இவர்கள்தான் உயிரோடு இருப்பதாக அறிவிக்கிறார்கள். இப்பொழுது, உயிரோடு இருப்பதாக அறிவிப்பதற்கான காரணம் என்ன ? பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறனை நம்ப வைத்தவர்கள்தான் நிதி வசூலில் ஈடுபட்டனர்.


பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற அறிவிப்பால், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சிறிய அரசியல் தீர்வு கூட, கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். விடுதலை மீதான தடையை, இலங்கை அரசு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. ஆயுத போராட்டங்களை விட்டுவிட்டு, இலங்கையில் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


பழ. நெடுமாறன் ஆபத்தை உணராமல் பேசுகிறார். வைகோ, ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் ஆபத்தை உணர்ந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளரான தயா மோகன் தெரிவித்தார்.


தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு மன்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் ”பழ. நெடுமாறன்” நிருபர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறியதாவது: தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஐயம் இருக்கும். இந்த செய்தியில் தற்போது இது உறுதியாக இருக்கும் என்பதை நம்புகிறேன். தமிழீழம் பற்றி விரிவான திட்டத்தை அறிவிக்க இருக்கிறார். உலகத்தில் உள்ள அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.




இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவிற்கு எதிராக சீனா செயல்படுகிறது இதனை தடுக்க முற்பட வேண்டும். பிரபாகரன்  குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பு மூலம் நான் அறிந்த செய்தியை அவர்கள் அனுமதியுடன் தற்போது தெரிவித்திருக்கிறேன். எங்கே இருக்கிறார் எப்போது வருவார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களுக்கும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.


ஆனால் விரைவில் அவர் வெளிப்படுவார். அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். சர்வதேச சூழல் அன்று கை விரித்தது. ராஜபக்சேவை ஆட்சியில் அமர வைத்த அதே சிங்கள மக்கள் அவரை தற்போது நாட்டை விட்டு விரட்டி இருக்கிறார்கள். இதைவிட நல்ல சூழல் எதுவாக இருக்காது.


இந்த சூழ்நிலையில் இந்திய மக்களுக்கு ஆதரவாக  ஈழத் தமிழர்கள் இருப்பார்கள். இந்த செய்தி ஈழத் தமிழர்களுக்கு நன்மையும் கொடுக்கும். நம்பிக்கையும் கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.