பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, சென்னை பசுமைவழிச்சாலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் ஆதரவாளரான பொன்னையன்,  ”பாஜக வடநாட்டிலே எப்படிப்பட்ட செயல்களை எல்லாம் செய்தது, அவர்களுடைய கூட்டணி ஆட்சிகள் எப்படியெல்லாம் கவிழ்ந்தன, அந்த ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜக பிடித்தது என்பது எல்லாம் மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.  எனவே பாஜக விவகாரத்தில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக தனித்து தான் போட்டியிட்டது, எனவே தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது தொடர்கிறதா என்ற கேள்விக்கே பொருள் இல்லை.  மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் பாஜகவும் எங்களை விரும்பலாம், எங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை விரும்பலாம் அல்லவா, இறுதி முடிவு என்ன என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்” எனவும் கூறினார். 


கூட்டணி முறிந்ததா?


பாஜக உடனான கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலேயே முடிந்து விட்டது என, பொன்னையன் பேசி இருப்பது தற்போதைய அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில், ஈபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு அளிக்க மறுத்துவிட்டதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.


பாஜகவின் பேச்சால் வெடித்த சர்ச்சை:


ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என பெரும் குழப்பம் நிலவியது.  இதுதொடர்பான கேள்விக்கு, பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும் என, பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி தெரிவிக்க, மறுநாளே ஈபிஎஸ் அணி வேட்பாளரை அறிவித்தது. அப்போது தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் , தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பாஜக தலைமையிலான கூட்டணியின் பெயருக்கு பதிலாக, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டு இருந்தது.  இதனால் பாஜக - ஈபிஎஸ் தரப்பு கூட்டணி முறிவடைந்ததோ என்ற கேள்வி எழுந்தது. அதேநேரம், ஓபிஎஸ்-ம் தனது தரப்பு வேட்பாளரை அறிவித்தார். ஆனாலும், ஒருவேளை பாஜக போட்டியிட்டால், அக்கட்சிக்கு ஆதரவாக தனது வேட்பாளரை திரும்பப் பெறுவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், ஈபிஎஸ்-ஐ பாஜக தமிழக தலைவர் அண்ணாமாலை சந்தித்த சில நிமிடங்களிலேயே, அக்கட்சியை கடுமையாக விமர்சித்து, ஈபிஎஸ்-ன் ஆதரவாளரான பொன்னையன் பேசியுள்ளார்.