கரூர் தொகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் அதிப் (ADIP) திட்ட முகாம்களை நடத்த கரூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்து வருவதாக கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், முகாம் நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார். 


                                                         


 


முன்னதாக, கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதிகளில் மாற்றுத்திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனத்தின் மூலம் உபகரணங்கள் வழங்க தேர்வு முகாம்கள் நடத்த எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.  


 


                                                             


இக்கடிதத்திற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் டி. குணாலன் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம்- அலையின் போது விதிக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்த இயலமில்லை. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக வாரந்தோறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன, அனைத்து அரசு அலுவலர்களும் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, முகாம்களை நடத்துவதில் எவ்வித காலதாமதமும் நிகழவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்திலேயே முன்னோடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதோறும் சென்று தடுப்பூசி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு 80 % சதவீதத்திற்கும் மேல் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் காணொளி குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.


மேலும், மாற்றுத்திறனாளின் நலம் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியதால்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் கரூரில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகளை ஒரே நேரத்தில் வழங்கும் விதமாக ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி முகாம்களை நடத்துமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மூலமாகவே மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.


எனவே, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் இந்த ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நல முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இவை குறித்த தகவல் தங்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். மேற்கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு தேவையிருப்பின் தாங்கள் கோரியது போல அலிர்கோ நிறுவனத்தின் தேர்வு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். 




 


மாவட்ட ஆட்சியரின் இந்த கடிதத்துக்குப் எதிர்வினையாற்றும் வகையில் ஜோதிமணி எம்.பி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் மாற்றுத் திறனளிகளுக்கான திட்டங்களை எனது முன்னெடுப்பில் செயல்படுத்தினால் ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்பதால் ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்த கரூர் ஆட்சியர் அனுமதிக்க மறுக்கிறாரா?  என்றும் ஆட்சித் தலைவர் மேசையிலிருந்து 1% - 2% வரை கட்டாய வசூல் முடிந்த பிறகுதான் கோப்புகள் நகரும் என மக்கள் மத்தியில் பரவலான அபிப்ராயம் உள்ளது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.  


 



மேலும், தனது பேஸ்புக் பதிவில்,   நான் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6800 கிராமங்களில் 6300 கிராமங்களுக்கு போய் மக்களை சந்தித்திருக்கிறேன். உதவி கேட்டு மனு கொடுத்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை கண்டு அதிர்ந்துபோனேன். தேவை இருக்கிறது என்று தெரியாமலா  இந்த திட்டத்தை கேட்டு வாங்கியிருப்பேன்?  ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த மறுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா? எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இப்படியொரு பதில் கடிதம் கொடுக்கிறார்? ஒன்றிய அரசின் திட்டமானாலும்,தமிழக அரசின் திட்டமானாலும் அடிப்படையில் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படுவதுதான். கரூருக்கு  ஒன்றிய அரசின் திட்டம் இப்பொழுது தேவையில்லை என்று எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முடிவுக்கு வந்தார்?" என்று காட்டமாக பதிலளித்தார். 


இந்நிலையில், நேற்று இரவு எம்.பி ஜோதிமனிக்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக ஆட்சித் தலைவர் தனது ட்விட்டர் பதிவில், " வாய்மையே வெல்லும்" எனும் வாசகத்தை பதிவு செய்தார். 










"நீங்கள் சிந்திப்பதும், பேசுவதும், செயல்படுவதும் ஒரே அலைவரிசையில் இருப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி" என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மறைமுகமாக பதிலளித்த ஜோதிமணி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.