வரும் நவம்பர் 27 அன்று, திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியினர் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
திமுகவின் மாநில இளைஞரணிச் செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இந்த ஆண்டு தனது பிறந்தநாளைச் சட்டமன்ற உறுப்பினராகக் கொண்டாடுகிறார். மேலும், திமுக ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது உதயநிதியின் பிறந்தநாளை மேலும் கொண்டாடத்தக்கதாக திமுகவினருக்கு மாற்றியுள்ளது. இந்நிலையில், தன் ரசிகர்களும், கட்சியினரும் தன் பிறந்தநாளைக் கொண்டாட ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை அறவே தவிர்த்துவிட்டு, அந்தச் செலவை நலத்திட்ட உதவிகளுக்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதுவே தனக்கான பிறந்தநாள் பரிசு எனவும் கூறியுள்ளார்.
ட்விட்டரில் தன் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து அறிக்கை ஒன்றைப் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அந்தப் பதிவில், `ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை அறவே தவிர்க்கவேண்டும். இதுபோன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளுக்குப் பயன்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பணியே... எனக்கான பிறந்தநாள் பரிசு!. நன்றி.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த அறிக்கையில், அவர் வடகிழக்குப் பருவமழையின் நிவாரணப் பணிகளில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிட்டு, 2015ஆம் ஆண்டைப் போல இந்த ஆண்டு வெள்ளம் ஏற்படாததற்கு இத்தகைய களப்பணியே காரணம் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, தனது தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் பருவ மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு வருவதாகவும், அதனால் தன் பிறந்தநாள் விழா, கொண்டாட்டங்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்க வேண்டும் எனவும், அவர்கள் முகம் சுளிக்கும் விதமாக இருக்கக் கூடாது எனவும் அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து அவர் வடகிழக்கு பருவ மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்வது முதலானவற்றில் திமுகவினர் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும் எனவும், அதைவிட தனக்கு மகிழ்ச்சி தருவது எதுவும் இல்லை என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.