"தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?" என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்தியாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் 261 சதவீத வளர்ச்சிப்பெற்று இந்தியாவில் 2ஆவது பணக்காரர் ஆனார் கவுதம் அதானி. நாளொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக ஐஐஎஃப்எல் நிறுவனம் கூறியுள்ளது.


நாட்டில் வேலையின்மை, கொரோனா தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் தனிநபரின் வருமானம் குறைந்துள்ள நிலையில், அதானியின்  ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளதை என்ற செய்தி பணக்காரர்களை தவிர, மற்றவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது.


இந்த நிலையில், அதானியின் ஒரு நாள் வருமானம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 32   (3.20 கோடி) மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?” எனப் பதிவிட்டுள்ளார்.


 






அதானியின் அசுர வளர்ச்சி


ஐஐஎஃப்எல் நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழுமமான முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் வழக்கம் போல முதல் இடத்தைப்பெற்றுள்ளார். சென்ற ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த கவுதம் அதானி அசுர வளர்ச்சிப்பெற்று இந்தாண்டு இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் கடந்த ஆண்டைக்காட்டிலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் அதானி அசுர வளர்ச்சிப்பெற்றுள்ளார் என ஆய்வுகள் கூறுகின்றன. 




முகேஷ் அம்பானி : இந்தியாவின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின்  சொத்து 7,18,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.  இதனால் எப்போதும் போல முகேஷ் அம்பானியின் குடும்பமே இந்தியப்பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தைப்பிடித்துள்ளது. இவர்களது தினசரி வருமானம் 163 கோடியாக உள்ளது.



கவுதம் அதானி :  இந்தியாவில் இரண்டாவது பணக்காரராக உள்ளார் கவுதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு  கடந்த ஆண்டில் 1,40,200 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 5,05,900 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது . தற்போது இவரின் சொத்து மதிப்பு 261 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1000 கோடி வருமானம் ஈட்டிவருகின்றார்.


ஒரே ஆண்டில் 261% வளர்ச்சி... இந்தியாவின் 2வது பணக்காரர் ஆனார் அதானி!