ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இன்று துவங்கிய ஒரு வார தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் துவக்கி வைத்தார்.
மகப்பேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நடிகை சரண்யா பொன்வண்ணன்:
தனக்கு ஏற்பட்ட மகப்பேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர் செவிலியர்களும் தன் குழந்தை நல மருத்துவரும் ஊக்குவித்தபடி தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வளர்த்தாகவும், அதனால் தன் இரண்டு பெண் குழந்தைகளும் நல்ல உடல், மன நலத்துடன் மருத்துவர்களாக உள்ளனர் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் Dr. உமாசேகர்,"குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இன்று மிகவும் அரிதாகி விட்டது. அது மட்டுமே குழந்தைக்கு போதுமா என்ற ஐயம் பல தாய்மார்களுக்கு உள்ளது. அதனை நாம் போக்க வேண்டும்" என்று கூறினார்.
மருத்துவக் கல்லூரி தலைவர் Dr. பாலாஜி சிங் பேசுகையில், தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் மிகவும் குறைவே என்றார். நிகழ்ச்சியில் கல்வித்துறைத் தலைவர் Dr. லதா ரவிச்சந்திரன் மற்றும் ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியை இணைந்து வழங்கும் மகப்பேறு, பச்சிளம் குழந்தை, குழந்தை நலம், செவிலியர் மற்றும் சத்துணவு மருத்துவ துறைகளின் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.