தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பெண்களுக்கு  வீட்டில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ தொந்தரவு வந்தால் அவர்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் உடன் இருக்கும் என கூறினார்.


யார் தவறு செய்தாலும் தண்டனை:


மேலும் அவர் பேசுகையில், கலாஷேத்ராவைப் பொறுத்தவரையில் தேசிய மகளிர் ஆணையம் சட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வருகிறது. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தினைப் பொறுத்தவரையில், நாங்கள் அவர்கள் பக்கம் தான் இருக்கிறோம். மேலும், முதலில் வீராங்கனைகள் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். எனவே அந்த விஷயம் நீதிமன்றம் மூலம் தான் தீர்க்கப்படும் என்றார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் கூறியுள்ளார்.


அதேபோல், திருவண்ணாமலை ராணுவ வீரரின் மனைவி அவமரியாதை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த விஷயத்தில் ராணுவ வீரர் எதற்கு பொய் சொல்ல வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாடு டி.ஜி.பி இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளார் என கூறினார்.


ராணுவ வீரர் மனைவி:


இதற்கு முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம்  எதிரில்  பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் இந்த கடையை குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் குத்தகை எடுத்துள்ளார். அவரிடமிருந்து ராணுவ வீரரின் மனைவி வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வந்துள்ளார். 


இதற்கிடையில் தற்பொழுது ஒப்பந்தம் முடிவடைந்து கடையினை காலி செய்ய வேண்டும் என ராமு கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் ராமு தரப்பினர் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பொருட்களை வீசி எறிந்துள்ளதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் கீர்த்தி தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சந்தவாசல் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


கண்ணீர் விட்ட ராணுவ வீரர்:


இதனிடையே காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் பிரபாகரன் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் கடை வைத்துள்ள எனது மனைவியை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளார்கள். அவர் நடத்தி வந்த கடையை காலி செய்யக்கோரி 120 பேர்  கும்பலாக வந்து கடையை சேதப்படுத்தியதோடு, மனைவியையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,க்கு புகார் அனுப்பியுள்ளேன். உள்ளூர் காவல் நிலையத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் குடும்பத்தினரை காப்பாற்றுங்கள்’ என மண்டியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.