குளித்தலை அருகே மைலாடியில் ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. எல்லை கோட்டில் இருந்து காளைகள், குதிரைகள் சீறி பாய்ந்து சென்றது காண்போரை பரவசமடைய செய்தது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மைலாடி ஊர் பொதுமக்கள் மற்றும் ரேக்ளா சங்கத்தினர் சார்பில் மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இதில், மாடுகளுக்கான தேன் சிட்டு மாடு, சிறிய ஒத்தை மாடு, பெரிய ஒத்தை மாடு, சிறிய இரட்டை மாடு, பெரிய இரட்டை மாடு, குதிரைகளுக்காக புதிய குதிரை, சிறிய குதிரை, பெரிய குதிரை, சைக்கிள் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இந்த எல்கை பந்தயப் போட்டியில் காளைகள் மற்றும் குதிரைகள் எல்லைக்கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன.
தேன் சிட்டு மாட்டிற்கு 4 மைல் தொலைவும், சிறிய ஒத்தை மாட்டிற்கு 6 மைல் தொலைவும், பெரிய ஒத்தை மாட்டிற்கு 8 மைல் தொலைவும், பெரிய இரட்டை மாட்டிற்கு 10 மைல் தொலைவும், புதிய குதிரைக்கு 6 மைல் தொலைவும், சிறிய குதிரைக்கு 8மைல் தொலைவும், பெரிய குதிரைக்கு 10 மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள், குதிரைகள் கலந்து கொண்டு எல்லைக் கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன.
எல்கை பந்தய போட்டியில் குறைவான நேரத்தில் இலக்கை எட்டி பிடித்து வெற்றி பெற்ற குதிரை மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. இந்த எல்கை பந்தயம் போட்டியினை பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆராவரத்துடன் கண்டுகளித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்