மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தி மொழியை இந்தியாவின் இணைப்பு மொழியாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனத்தை பதிவிட்டு வந்தனர். அந்தவகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 


இந்நிலையில் இது தொடர்பாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான காய்தரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஒரு தனியார் யூடியூப் செனலுக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “ஏஆர்.ரஹ்மான் கூறுவதை முழுக்க நான் ஆதரிக்கிறேன். அவர் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெருமையாக எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறினார். அதேபோல் இனிமேல் இந்தி படங்களில் பாடல் செய்யும் போது அதை தமிழில் செய்ய வேண்டும். அதன்மூலம் இந்தி மக்கள் தமிழ் கற்று கொள்வார்கள். அது தானே இணைப்பின் தொடக்கம். வெறுமென சொல்வதுடன் இருக்க கூடாது. ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யக்கூடாது. நாமும் அதை செய்ய வேண்டும்.


 


ஜெய் ஹோ என்ற இந்தி பாடலுக்காக அவர் ஆஸ்கார் விருதை வென்றார். அப்போது நான் இந்தப் பாடலை தமிழில் செய்யவில்லை என்பதால் எனக்கு இந்த விருது தேவையில்லை என்று கூறினாரா?” எனத் தெரிவித்துள்ளார். 


இதனால் ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் காயத்ரிக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 


 






ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில ஆண்டுகளாக தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் மொழியின் புகழைப் பரப்பும் விதமாக பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் மூப்பில்லா தமிழ் என்று தமிழின் பெருமை பறைசாற்றும் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். மேலும், புகழ்பெற்ற ஆஸ்கர் விருதை வென்றபோது கூட எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழிலே பேசி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.  அத்துடன் ஒரு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டப் போது ஏஆர் ரஹ்மான் பதிலளிக்காமல் மேடையிலிருந்து இறங்கினார். அந்த வீடியோ அப்போது வேகமாக வைரலானது. இந்தச் சூழலில் தற்போது அவர் கூறிய கருத்தும் மீண்டும் பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண