5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்த 100 ஊழியர்களுக்கு மாருதி சுசுகி காரை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவனம்.


Ideas2IT என்ற ஐடி நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. அதன் உரிமையாளர் நிறுவனர் முரளி விவேகனந்தன். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். காயத்ரி விவேகானந்தன். இவர்கள் இருவரும் இணைந்து தங்கள் நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த 100 ஊழியர்களுக்கு தலா ஒரு காரை பரிசாகக் கொடுத்துள்ளனர். 


அண்மையில் தான் Kiss Flow என்ற மென்பொருள் நிறுவனம் தனது ஊழியர்கள் ஐவருக்கு BMW Car வழங்கிய செய்தி வெளியானது. கிஸ்ப்ளோ நிறுவனமும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் சார்பில் ஊழியர்களுக்கு  அன்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது நிறுவனத்தின் தொடக்க காலம் முதல் பணியாற்றியவர்களுக்கு அதாவது சென்னையைச் சேர்ந்த தனது கிஸ்ப்ளோ தலைமை குழுவிற்கு சுரேஷ் சம்பந்தம் விலையுயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.


இந்நிலையில் தான் இப்போது இன்னொரு ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு கார் வழங்கிய செய்தியும் வெளியாகியுள்ளது.






இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் முரளி விவேகானந்தன் கூறுகையில், இந்தியாவிலேயே 100 ஊழியர்களுக்குக் கார் கொடுத்த முதல் ஐடி நிறுவனம் என்ற பெயரை நாங்கள் பெற்றுள்ளோம். கொரோனாவுக்குப் பின்னர் தொழில்துறைகள் சீரானதால் ஊழியர்களை தக்கவைக்க இதை நாங்கள் கொடுக்கவில்லை. மாறாக, கடினமான சூழலிலும் கடுமையாக உழைத்து திறமையை வெளிப்படுத்தியவர்களைக் கவுரவிக்கக் கொடுத்துள்ளோம் என்றார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு உலகை ஆட்கொண்டது கொரோனா. அதன் பின்னர் பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு, சம்பளக் குறைப்பு என இயங்கி வந்தது. இந்தியாவும் மூன்று கொரோனா அலைகளைக் கடந்துவிட்டது. இப்போது மெல்ல மெல்ல தொழில்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதால் பல நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து வருகிறது.


இன்னும் சில நிறுவனங்கள் ஒருபடி மேலே சென்று இது மாதிரியான ஊக்கப் பரிசுகளை வழங்கியுள்ளது. அண்மையில் சர்வதேச ஆய்வு நிறுவனமான மைக்கேல் பேஜ் சம்பள அறிக்கை 2022ஐ வெளியிட்டது. அதன்படி, இந்த ஆண்டு சம்பள உயர்வு 9 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.