சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்று மாணவ, மாணவியர்களை கவுரவித்தார். 12ஆம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு வைர கம்மல் வழங்கினார். 


தொடர்ந்து விருது நிகழ்ச்சியில் பேசிய விஜய் தெரிவித்ததாவது:


’’மாணவர்களின் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் இடத்தில் இருப்பது எனக்கு எனர்ஜியைத் தருகிறது. நீங்கள் எல்லோருமே உங்களின் கேரியரை முடிவு செய்யும் முக்கியமான இடத்தில் இருக்கிறீர்கள். உங்களில் சிலருக்கு மருத்துவர், பொறியாளர், பைலர் என வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று தெளிவான சிந்தனை இருக்கலாம்.


ஆனால் சிலருக்கு என்ன படிக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படலாம். அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எல்லாத் துறையும் நல்ல துறைகள்தான். நீங்கள் எதைத் தேர்வு செய்கிறீர்களோ அதை முழு ஈடுபாட்டுடன் 100 சதவீத உழைப்பைக் கொடுத்தால், வெற்றி நிச்சயம்.


பிடித்த துறையைத் தேர்ந்தெடுங்கள்


உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுங்கள். உங்களின் பெற்றோர், ஆசிரியர்களிடம் விவாதியுங்கள். உயர் கல்வி ஆலோசகர்கள், வழிகாட்டிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசுங்கள்.


இந்த நேரத்தில் என்னுடைய கேரியர் வழிகாட்டலை அளிக்க விரும்புகிறேன். ஒரு துறையைத் தேர்வு செய்யும்போது அதில் எவ்வளவு டிமாண்ட் இருக்கும் என்று பார்ப்போம். இந்த நிலையில் இங்கு என்ன இல்லை என்று பார்க்கலாம். இங்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். இதை அரசியல் ரீதியாக மட்டும் சொல்லவில்லை. எந்தத் துறையாக இருந்தாலும் தலைமை தேவைப்படுவதையே சொன்னேன்.


அரசியல் ஏன் கேரியர் ஆகக்கூடாது?


வருங்காலத்தில் அரசியல் ஏன் ஒரு Career Option ஆக வரக்கூடாது? வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், தலைவர்களாக வேண்டும். இப்போதைக்குப் படியுங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம்’’.


இவ்வாறு த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்தார்.