"நான் அத்தனை தேர்வுகளில் தோற்றிருக்கிறேன். கேவலமாக தோற்றிருக்கிறேன், மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல என நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்


சமீப நாட்களாக நீட் தேர்வு தற்கொலைகள் அரங்கேறி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எதற்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யாவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் அத்தனை தேர்வுகளில் தோற்றிருக்கிறேன். கேவலமாக தோற்றிருக்கிறேன். மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. நம்பிக்கையோடு தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் ஜெயிக்கலாம். பெரிதாக ஜெயிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் பேசிய அவர், ஒரு பரீட்சை உங்கள் உயிரை காட்டிலும் பெரிதல்ல. மாணவர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என ஒரு அண்ணணாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா


 






இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் நீட் தேர்வு காரணமாக உயிரிழப்புகள் தொடர்கின்றன. நீட் தேர்வுக்கு முதல்நாளே தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் 14ஆம் தேதி கனிமொழி என்ற மாணவியும், 1 5ஆம் தேதி சவுந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். ஒரு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. நீட் தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு, நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.