பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் ட்விட் செய்த விவகாரத்தில் சென்னை க்ரைம் போலீசாரிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். 


பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பிரபல பெண் ஊடகவியலாளர் குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி, நடிகர் சித்தார்திடம் விசாரணை நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையம் சென்னை போலீசாருக்கு புகார் அளித்து இருந்தது. இதுதொடர்பாக கடந்த மாதம் 10 ம் தேதி சித்தார்த்துக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பினர். 


இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வாக்குமூலம் அளித்த நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததற்கும், பெண் ஊடகவியலாளரை அவதூறாக பேசிய விவகாரத்திலும் மன்னிப்பு கேட்பதாக தன்னுடைய வாக்கு மூலத்தில் தெரிவித்திருப்பதாக சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.  இரண்டு புகார்கள் தொடர்பாகவும் நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்னை மாநகர போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.


 


என்ன நடந்தது 


கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் "எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று சாய்னா தெரிவித்திருந்தார். 


சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், "இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.  இறகுப்பந்து என்பதற்கு ஷட்டில்கார்க் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதனை நகைச்சுவையாக, கேலி செய்யும் விதமாக "சப்ட்டில் காக்(Subtle Cock)" என்று ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். காக் என்றால் ஆண்குறி என்று ஒரு அர்த்தம் ஆங்கிலத்தில் உள்ளது. ஆபாசமான வார்த்தைகள் கூறியதாக ட்விட்டரில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.


மன்னிப்பு கேட்ட சித்தார்த்


இந்நிலையில் அந்த ட்விட்டை நீக்கிய சித்தார்த், அவரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டார்.  


 







சித்தார்த்தின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட சாய்னா  ''சித்தார்த் முதலில் என்னைப் பற்றி ஏதோ சொன்னார், பிறகு மன்னிப்பு கேட்டார். அது ஏன் இவ்வளவு வைரலானது என்று கூட தெரியவில்லை. ட்விட்டரில் நானே டிரெண்டாகி வருவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. அப்படி ஒரு பெண்ணை குறிவைக்கக் கூடாது. பரவாயில்லை. நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் என் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்'' எனத் தெரிவித்தார்.