தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், கடந்த சனிக்கிழமை இரவு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு திடீரென சென்றார். வழக்கமான உடல்பரிசோதனை என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறினாலும், ரஜினிகாந்த் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டதும், அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு மாறி, மாறி வந்ததும் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.






மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார்.


வீடு திரும்பிய பிறகு, நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு திரும்பிவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது மகள் சௌந்தர்யா உருவாக்கியுள்ள ஹூட் செயலியில் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். அந்த ஆடியோவில், “ நான் நலமாக இருக்கிறேன். நான் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நல் உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.






முன்னதாக, நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து, நேற்றிரவு வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.




மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த் வீட்டின் உள்ளே செல்லும் முன்பு தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு சென்றார். இதைக்கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். மேலும், அவர் வீடு திரும்பிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதை கண்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மேலும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் தீபாவளி தினத்தன்று அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு, ரஜினிகாந்த் முழு கமர்ஷியலாக நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அண்ணாத்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண